ரெயில்வேயில் வேலை வாங்கி தருவதாக ரூ.2 கோடி மோசடி சகோதரர்கள் கைது

ரெயில்வேயில் வேலை வாங்கி தருவதாக ரூ.2 கோடி மோசடியில் ஈடுபட்ட சகோதரர்கள் கைது செய்யப்பட்டனர்.

Update: 2021-08-04 04:42 GMT
திருவள்ளூர், 

திருவள்ளூரை அடுத்த பள்ளிப்பட்டு அருகே பொம்மராஜுபேட்டை ஒடைதெருவை சேர்ந்தவர் தண்டபாணி. இவரது மகன் சத்தியராஜ் (வயது29). இவரது நண்பர்கள் கண்ணாபிரான், முருகன், பாலாஜி, சீனிவாசன். ஆகியோர் படித்து விட்டு வேலையில்லாமல் இருந்தனர்.

அப்போது ரெயில்வேயில் வேலை உள்ளதாக இவர்களுக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து சத்யராஜ் தனது நண்பர்கள் கண்ணாபிரான், முருகன், பாலாஜி, சீனிவாசன் ஆகியோருடன் சேர்ந்து ரெயில்வேயில் வேலை பெற முயற்சி செய்து கொண்டிருந்தார். சத்யராஜ் ரெயில்வேயில் வேலை தேடி கொண்டிருப்பதை அறிந்த அரக்கோணம் ஜெகஜீவன்ராம் தெருவை சேர்ந்த புஷ்பராஜ் தனது மகன்களான பாலாஜி, அரவிந்த் (24), ராகுல் (26) மற்றும் உறவினரான வெங்கடேசன் என்கிற ரத்தினம் ஆகியோருடன் சென்று சத்யராஜை நாடினார்.

அவர்கள் ரெயில்வேயில் வேலை வாங்கி தருவதாக தெரிவித்துள்ளனர். இதை நம்பிய அவர்கள் தலா ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் என மொத்தம் 12 லட்சத்து 50 ஆயிரத்தை கொடுத்தனர். இதை நம்பும் வகையில் பணிநியமன ஆணை மற்றும் அடையாள அட்டைகளையும் வழங்கியுள்ளனர்.

வேலை கிடைத்த சந்தோஷத்தில் மேற்கொண்ட 5 பேரும் பணியில் சேர சென்றனர். அப்போது தாங்கள் ஏமாற்றப்பட்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர். இதேபோல் போலியான பணி நியமன ஆணை வழங்கி 40 பேரிடம் ரூ. 2 கோடி வரை ஏமாற்றியது தெரியவந்தது. பாதிக்கப்பட்ட மேற்கண்ட 5 பேரும் திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் வருண்குமாரிடம் புகார் மனு அளித்தனர். அதன் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு அசோகன் தலைமையில், இன்ஸ்பெக்டர் லில்லி, சப்-இன்ஸ்பெக்டர்கள் சூரியகுமார், வாசுதேவன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தனர். இதை தொடர்ந்து போலீசார் தலைமறைவாக இருந்த சகோதரர்களான அரவிந்த், ராகுல், ஆகியோரை கைது செய்து் திருவள்ளூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள அரவிந்தின் தந்தை புஷ்பராஜ், பாலாஜி, உறவினர் வெங்கடேசன் ஆகியோரை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்