சங்ககிரியில் தீரன் சின்னமலை நினைவு தினம் அனுசரிப்பு- எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை உள்பட அரசியல் கட்சியினர் அஞ்சலி
சங்ககிரியில் தீரன் சின்னமலை நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. அவரது உருவப்படத்துக்கு எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை உள்பட அரசியல் கட்சியினர் அஞ்சலி செலுத்தினார்கள்.
சங்ககிரி:
சங்ககிரியில் தீரன் சின்னமலை நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. அவரது உருவப்படத்துக்கு எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை உள்பட அரசியல் கட்சியினர் அஞ்சலி செலுத்தினார்கள்.
அ.தி.மு.க.
சங்ககிரியில் சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு இடம் அமைந்துள்ளது. இங்கு நேற்று தீரன் சின்னமலையின் 216-வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி அவரது உருவப்படம் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது.
இதையொட்டி அ.தி.மு.க. சார்பில் நடந்த நிகழ்ச்சியில் அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி, தீரன் சின்னமலை உருவப்படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். மேலும் முன்னாள் அமைச்சர் தங்கமணி, எம்.எல்.ஏ.க்கள் சுந்தரராஜன், ராஜமுத்து, ஜெய்சங்கரன், நல்லதம்பி, பாலசுப்ரமணி மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் செம்மலை, வெங்கடாசலம், சேலம் மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர் ரேவதி, அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் வெங்கடேசன், சங்ககிரி கிழக்கு ஒன்றிய செயலாளர் ரத்தினம், சங்ககிரி ஒன்றிய குழு தலைவர் மகேஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அண்ணாமலை
இதே போல பா.ஜனதா கட்சி மாநில தலைவர் அண்ணாமலை, தீரன்சின்னமலை உருவப்படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். அவருடன் சேலம் மாவட்ட தலைவர் சுதிர் முருகன், மாவட்ட செயலாளர் ரமேஷ்கார்த்திக் உள்பட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
பாட்டாளி மக்கள் கட்சி மாநில தலைவர் ஜி.கே. மணி தலைமையில் தீரன்சின்னமலை உருவப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. அவருடன் மாநில துணை பொதுச்செயலாளர் கண்ணையன், மாவட்ட செயலாளர் அண்ணாதுரை உள்பட பலர் உடனிருந்தனர்.
கொ.ம.தே.க.
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் சின்ராஜ் எம்.பி. தலைமையில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் சரவணன், ராஜ்குமார் முன்னிலையில் தீரன் சின்னமலை உருவப்படத்துக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
சங்ககிரி வட்ட கொங்கு இளைஞர் சங்க தலைவர் ராமசாமி தலைமையில் அறக்கட்டளை தலைவர் சண்முகம் முன்னிலையில் தீரன் சின்னமலை உருவப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்கள்.
இதே போன்று பல்வேறு அரசியல் கட்சியினரும், அமைப்பினரும் அஞ்சலி செலுத்தினார்கள்.