நடுரோட்டில் 14 நாட்கள் தவிப்பு; 700 வாகனங்களின் டிரைவர்- கிளீனர்கள்; சாலை மறியல் போராட்டம்

மண் சரிவால் சாலை சேதமடைந்ததால் நடுரோட்டில் 14 நாட்களாக தவித்த 700 வாகனங்களின் டிரைவர்கள்- கிளீனர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மாற்று வழியில் வாகனங்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டன.

Update: 2021-08-03 21:34 GMT
பெங்களூரு: மண் சரிவால் சாலை சேதமடைந்ததால் நடுரோட்டில் 14 நாட்களாக தவித்த 700 வாகனங்களின் டிரைவர்கள்- கிளீனர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மாற்று வழியில் வாகனங்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டன. 

சாலை சேதம்

கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. மலைநாடு, வடகர்நாடகம் மற்றும் கடலோர கர்நாடக பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இந்த நிலையில் கடலோர மாவட்டமான உத்தரகன்னடாவிலும் கடந்த மாதம் இறுதியில் கனமழை கோரதாண்டவமாடியது. இதில் கார்வார் அருகே அங்கோலா-உப்பள்ளி தேசிய நெடுஞ்சாலையில் சுங்கச்சாவடி அருகே மண் சரிவு கடந்த மாதம் 24-ந்தேதி ஏற்பட்டது. இதில் சாலை முழுவதும் பலத்த சேதமடைந்தது. 

இதனால் அந்த வழியாக போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. இதன் காரணமாக மராட்டியம், ஆந்திரா, தெலுங்கானா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து சரக்குகளை ஏற்றி வந்த வாகன ஓட்டிகள் திரும்பி செல்ல முடியாமல் அங்கோலா சோதனை சாவடியில் சிக்கி தவித்து வருகிறார்கள்.  இதன் காரணமாக அங்கு 700-க்கும் மேற்பட்ட வாகனங்கள் சாலையோரம் அணிவகுத்து நிற்கின்றன.

நடுரோட்டில் பரிதவிப்பு

ஒரு வாரத்தில் சாலை சீரமைக்கப்பட்டுவிடும் என கருதிய லாரி டிரைவர், கிளீனர்கள் தங்களிடம் இருந்த உணவு பொருட்கள் மூலம் ஒரு வாரம் சமைத்து சாப்பிட்டனர். அதன் பின்னர் உணவு பொருட்கள் காலியானதால் தங்களிடம் இருந்த பணத்தை கொடுத்து ஓட்டலில் உணவு வாங்கி சாப்பிட்டு வந்தனர். இதனால் நடுரோட்டில் லாரி உள்ளிட்ட கனரக வாகன ஓட்டுனர்கள், கிளீனர்கள் பரிதவித்து வந்தனர். 

இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறுகையில், ஒரு வாரத்திற்குள் அங்கோலா-உப்பள்ளி சாலையில் சீரமைப்பு பணி முடிந்து பணி தொடங்கும் என்று  கூறியிருந்தனர். ஆனால் மண் சரிவு ஏற்பட்ட 14 நாட்கள் கடந்த நிலையில் மண்சரிவு ஏற்பட்ட சாலையில் சீரமைப்பு பணி முடியடையவில்லை. அந்த பணி ஆமை வேகத்தில் நடந்து வருவதாக கூறப்படுகிறது. 

சாலை மறியல்

இதனால் 14 நாட்களாக சரக்குகளுடன் நடுரோட்டில் தவித்து வரும் வாகன டிரைவர்கள், கிளீனர்கள் அங்கோலோ பெலகாவி கிராசில் நேற்று சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். இதனால்  அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 

இதுபற்றி அறிந்த அங்கோலா போலீசாரும், நெடுஞ்சாலைத் துறையினரும் விரைந்து வந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்தினர். 

மாற்று வழியில் அனுமதி

அப்போது போராட்டக்காரர்கள், நாங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளோம். 14 நாட்களாக நடுரோட்டில் உணவு இன்றி பரிதவித்து வருகிறோம். ஆனால் சாலையை சீரமைக்கவில்லை. எங்களை மாற்று வழியில் செல்ல அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். 

இதைத்தொடர்ந்து கார்வார்-மங்களூரு சாலையில் 700 வாகனங்களை செல்ல அதிகாரிகள் அனுமதி வழங்கினர். அதன் பின்னர் போராட்டத்தை கைவிட்டு அவர்கள் கலைந்து சென்றனர். மேலும் கார்வார்-மங்களூரு சாலை வழியாக வாகனங்களை ஓட்டி ஒன்னாவர், சிர்சி பகுதிகளுக்கு சென்றனர். 

மேலும் செய்திகள்