பெங்களூரு தங்கும் விடுதியில் சிக்கமகளூரு வியாபாரி தற்கொலை
சிக்கமகளூருவில் காணாமல் போனதாக தேடப்பட்ட வியாபாரி, பெங்களூரு அருகே தனியார் தங்கும் விடுதியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்தார். காபி வியாபாரத்தில் ரூ.1 கோடி நஷ்டம் ஏற்பட்டதால் இந்த விபரீத முடிவை எடுத்து உள்ளார்.
பெங்களூரு:சிக்கமகளூருவில் காணாமல் போனதாக தேடப்பட்ட வியாபாரி, பெங்களூரு அருகே தனியார் தங்கும் விடுதியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்தார். காபி வியாபாரத்தில் ரூ.1 கோடி நஷ்டம் ஏற்பட்டதால் இந்த விபரீத முடிவை எடுத்து உள்ளார்.
வியாபாரி மாயம்
சிக்கமகளூரு மாவட்டம் மூடிகெரேயை சேர்ந்தவர் சாகீர் அகமது (வயது 28). இவர், காபி கொட்டைகளை மொத்த விலைக்கு விற்கும் வியாபாரம் செய்து வந்தார். இந்த நிலையில், கடந்த மாதம் (ஜூலை) 13-ந் தேதி திடீரென்று சாகீர் அகமது காணாமல் போய் விட்டார். சாகீர் அகமதுவை, அவரது குடும்பத்தினர் அக்கம் பக்கத்தில் தேடியும், விசாாித்து பார்த்தும் எந்த தகவலும் கிடைக்கவில்லை.
இதையடுத்து, சாகீர் அகமதுவை காணவில்லை என கூறி மூடிகெரே போலீஸ் நிலையத்தில், அவரது குடும்பத்தினர் புகார் அளித்திருந்தனர். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன அவரை தேடிவந்தனர்.
தங்கும் விடுதியில் தற்கொலை
இந்த நிலையில், பெங்களூரு புறநகர் மாவட்டம் நெலமங்களா டவுனில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் கடந்த 1-ந் தேதி ஒரு வாலிபர் அறை எடுத்து தங்கி இருந்தார். நேற்று முன்தினம் காலையில் அவர் தங்கும் விடுதி ஊழியரிடம் காலை உணவு வாங்கி சாப்பிட்டு இருந்தார். ஆனால் மதியம் நீண்ட நேரமாகியும் அந்த வாலிபர் அறையில் இருந்து வெளியே வரவில்லை. கதவை திறக்கும்படி பலமுறை கூறியும் அவர் திறக்கவில்லை.
சந்தேகம் அடைந்த தங்கும் விடுதி உரிமையாளர் மற்றொரு சாவி மூலமாக அறையை திறந்து பார்த்தார். அப்போது அங்கு அந்த வாலிபர் தூக்கில் தொடங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். இதுபற்றி தகவல் அறிந்ததும் நெலமங்களா டவுன் போலீசார் விரைந்து வந்து வாலிபரின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள்.
வியாபாரத்தில் ரூ.1 கோடி...
அப்போது அவர், காணாமல் போனதாக தேடப்பட்ட காபி வியாபாரி சாகீர் அகமது என்று அடையாளம் காணப்பட்டது. கடந்த மாதம் 13-ந் தேதி சிக்கமகளூருவில் இருந்து பெங்களூருவுக்கு வந்த அவர் தனது செல்போனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டு பல்வேறு பகுதிகளில் சுற்றி திரிந்துள்ளனர். கடந்த 1-ந் தேதி நெலமங்களாவுக்கு வந்து அறை எடுத்து தங்கிய அவர், நேற்று முன்தினம் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
மேலும் காபி கொட்டகைகளை வாங்கி விற்பனை செய்ததில் சாகீர் அகமதுவுக்கு ரூ.1 கோடிக்கு மேல் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக அவரிடம் காபி கொட்டகைகளை வாங்கிய வியாபாரிகள் பணத்தை கொடுக்காததாலும், வியாபாரம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டதாலும் மனம் உடைந்த அவர் தற்கொலை முடிவை எடுத்தது தெரியவந்தது. இதுகுறித்து நெலமங்களா டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.