அம்மாபேட்டை அருகே வலது கரை வாய்க்கால் சுரங்க நீர்வழிபாதையில் அடைப்பு- தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது

அம்மாபேட்ைட அருகே வலது கரை வாய்க்கால் சுரங்க நீர்வழி பாதையில் அடைப்பு ஏற்பட்டதால் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது.

Update: 2021-08-03 21:31 GMT
அம்மாபேட்டை
அம்மாபேட்ைட அருகே வலது கரை வாய்க்கால் சுரங்க நீர்வழி பாதையில் அடைப்பு ஏற்பட்டதால் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது. 
வாய்க்காலில் தண்ணீர் திறப்பு
மேட்டூர் அணையில் இருந்து இடது மற்றும் வலது கரை வாய்க்கால் பாசனப் பகுதிகளுக்கு கடந்த 1-ந் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. இதில் மேட்டூர் வலது கரை வாய்க்காலில் 200 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் நேற்று முன்தினம் மாலை 5 மணி அளவில் ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை பகுதிக்கு வந்து சேர்ந்தது.
குறிச்சி அருகே வாய்க்காலில் சுமார் 600 மீட்டர் தொலைவுக்கு தரைக்கடியில் தண்ணீர் சென்று மற்றொரு பகுதியில் வெளியேறும் வகையில் சுரங்க நீர்வழிப்பாதை (சைபன்) அமைக்கப்பட்டு உள்ளது.
பெருக்கெடுத்து சென்றது
இந்த நிலையில் இந்த பாதையில் நேற்று முன்தினம் மாலை திடீரென அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் வாய்க்காலுக்கு செல்லும் தண்ணீர் மெல்ல மெல்ல கசிய தொடங்கியது.  நேரம் செல்ல செல்ல தண்ணீர் மேலும் தேங்கியது. இதனால் வாய்க்காலுக்கு செல்லாமல் பக்கவாட்டில் தண்ணீர் சற்று பெருக்கெடுத்துச் சென்றது.
இதுகுறித்து நேற்று பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து வாய்க்காலுக்கு திறக்கப்பட்ட தண்ணீர் உடனடியாக நிறுத்தப்பட்டது. மேலும் வாய்க்காலில் வந்து கொண்டிருந்த   தண்ணீர்   ஆங்காங்கே பக்கவாட்டில் உள்ள மதகுகள் வழியாக வெளியேற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து அடைப்பினை நீக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
சீரமைப்பு பணி
இதையடுத்து பொதுப்பணித்துறையின் மேட்டூர் அணை செயற்பொறியாளர் தேவராஜன், உதவி பொறியாளர் டி.சுப்பிரமணியன், அம்மாபேட்டை உதவிப் பொறியாளர் சாமிநாதன் மேற்பார்வையில் 20-க்கும் மேற்பட்ட  ஊழியர்கள் அங்கு சென்று சீரமைப்புப் பணியில் ஈடுபட்டனர். ராட்சத எந்திரங்கள் கொண்டு பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
தரைக்கடியில் செல்லும் நீர்வழிப்பாதையில் 4 காற்று போக்கிகள் (ஏர் லாக்) உள்ளது. இதில், அடுத்தடுத்து 2 காற்று போக்கிகளில் உள்ள அடைப்புகள் நீக்கப்பட்டது. அப்போது, தண்ணீர் பீறிட்டு வெளியேறிச் சென்றது.  இதையடுத்து சுரங்க நீர்வழிப்பாதையை தூய்மைப்படுத்தும் பணி நடந்தது. பொதுப்பணித்துறை பணியாளர்கள் உள்ளே சென்று தூய்மை பணியில் ஈடுபட்டனர்.  இந்த பணி முடிவடைந்ததும் வாய்க்காலில் இன்று (புதன்கிழமை) தண்ணீர் திறந்து விடப்படும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்