3 வாலிபர்கள் தற்கொலை

சிவகாசியில் ஒரே நாளில் தனித்தனி சம்பவங்களில் 3 வாலிபர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2021-08-03 20:21 GMT
சிவகாசி, 
சிவகாசியில் ஒரே நாளில் தனித்தனி சம்பவங்களில் 3 வாலிபர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தூக்குப்போட்டு தற்கொலை 
சிவகாசி அருகே உள்ள விளாம்பட்டியை சேர்ந்தவர் பாண்டியராஜ் (வயது 31). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஜென்சி என்பவருக்கும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது. 
இந்த நிலையில் கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் பாண்டியராைஜ விட்டு ஜென்சி பிரிந்து சென்று விட்டார். இதை தொடர்ந்து பாண்டியராஜ் குடிபழக்கத்துக்கு அடிமையாகினார். இதனால் வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். இந்தநிலையில் மனமுடைந்த பாண்டியராஜ், தனது தந்தையின் வீட்டின் அருகில் இருந்த வேப்ப மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது தந்தை கருப்பையா மாரனேரி போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நாரணாபுரம் 
இதேபோல் சிவகாசி அருகே உள்ள நாரணாபுரம் பூச்சக்காப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சின்னலிங்கசாமி மகன் கருப்பசாமி (37). இவருக்கும் வச்சக்காரப்பட்டி அருகே உள்ள தடங்கம் கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணசாமி மகள் பஞ்சவர்ணம் என்பவருக்கும் கடந்த 2007-ம் ஆண்டு திருமணம் நடந்தது. 
 இந்த நிலையில் பஞ்சவர்ணம் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்னர் கருப்பசாமியை விட்டு பிரிந்து சென்று விட்டார். குழந்தைகளை பஞ்சவர்ணத்தின் தந்தை கிருஷ்ணசாமி வளர்த்து வந்தார். மனைவி, குழந்தைகளை பிரிந்து தனியாக வசித்து வந்த கருப்பசாமி மனமுடைந்த நிலையில் காணப்பட்டார். இந்த நிலையில்  தனது வீட்டில் கருப்பசாமி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது தாய் அய்யம்மாள் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஆட்டோ டிரைவர்
சிவகாசி பாரதிநகரை சேர்ந்தவர் பாண்டியராஜன் மகன் சங்கரபாண்டி (28). ஆட்டோ டிரைவர். திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வந்த இவருக்கு குடும்பத்தினர் பெண் பார்த்து வந்தனர். 
இந்தநிலையில் கடன் பிரச்சினைகளை சரி செய்த பின்னர் திருமணம் செய்து கொள்வதாக சங்கரபாண்டி கூறியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அவர் வீட்டில் யாரும் இல்லாத போது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து அவரது தம்பி தங்கபாண்டி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

மேலும் செய்திகள்