விடுதலையானவரின் வழக்கு விவரங்களை இணைய தளத்தில் இருந்து நீக்கக்கோரிய மனு தள்ளுபடி

உரிய சட்டங்கள் அமலில் இல்லாததால் விடுதலையானவரின் வழக்கு விவரங்களை இணையதளத்தில் இருந்து நீக்கக்கோரிய மனுவை தள்ளுபடி செய்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.

Update: 2021-08-03 19:55 GMT
மதுரை,ஆக
உரிய சட்டங்கள் அமலில் இல்லாததால் விடுதலையானவரின் வழக்கு விவரங்களை இணையதளத்தில் இருந்து நீக்கக்கோரிய மனுவை தள்ளுபடி செய்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இணைய தளத்தில் வழக்கு விவரங்கள்
கற்பழிப்பு வழக்கில் கீழ் கோர்ட்டில் தண்டனை பெற்ற வாலிபர் ஒருவர், ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கின் பேரில் விடுதலை செய்யப்பட்டார். இந்த நிலையில் மதுரை ஐகோர்ட்டில் அவர் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதில், “என் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இல்லை என்று கூறி ஐகோர்ட்டு என்னை கடந்த 2014-ம் ஆண்டு விடுதலை செய்து விட்டது. ஆனால் கூகுள் வலைதளத்தில் என் மீதான வழக்கு விவரங்கள் இன்றும் உள்ளன. என் பெயரை பதிவு செய்தால் தீர்ப்பு உள்ளிட்ட விவரங்கள் எல்லாம் பொதுமக்கள் பார்க்கும் வகையில் வருகிறது. எனவே, தீர்ப்பில் உள்ள என் பெயரை அகற்ற உத்தரவிடவேண்டும்” என்று கூறியுள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் பிறப்பித்த இடைக்கால உத்தரவில் கூறி இருப்பதாவது:-
சட்டம்
தற்போதுள்ள சூழ்நிலையில், உலகமே சமூக வலைத்தளத்தில் சிக்கி கிடக்கிறது. ஒருவரது பெயரை பதிவு செய்தால் போதும், அவரைப் பற்றிய அனைத்து விவரங்களையும் கூகுள் வலைதளத்தில் உடனே பெற்று விடலாம். ஆனால், கூகுள் வலைதளத்தில் உள்ள விவரங்கள் எல்லாம் உண்மை என்பதற்கு உத்தரவாதம் எதுவும் இல்லை.
ஆனால், இந்த விவரத்தின் அடிப்படையில் தான் ஒருவரது குணம் சமுதாயத்தில் கணிக்கப்படுகிறது. ஒவ்வொருவரும் தங்களை சமூக வலைதளங்கள் மூலம் சமுதாயத்தில் சிறந்தவர்களாக சித்தரிக்க முயற்சிக்கின்றனர்.
அந்த வகையில் மனுதாரர் விசித்தரமான பிரச்சினையை எதிர்கொள்கிறார். இவர் வழக்கில் இருந்து விடுதலை ஆனாலும், இவரது பெயரை கூகுள் வலைதளத்தில் பதிவு செய்தால், குற்றவாளியாக சித்தரிக்கும் பழைய தீர்ப்புகள் எல்லாம் வருகிறது. இதனால் சமுதாயத்தில் இவரது மரியாதைக்கு குந்தகம் ஏற்படுகிறது.
மத்திய அரசு கடந்த 2019-ம் ஆண்டு தரவு பாதுகாப்பு மசோதா கொண்டு வந்தது. அதை விரைவில் சட்டமாக கொண்டு வர உள்ளது. இந்த சட்டம் அமலுக்கு வந்து விட்டால், தனிநபரின் தனிப்பட்ட உரிமை, அந்தரங்கம் பாதுகாக்கப்படும் என்று இந்த ஐகோர்ட்டுக்கு தெரிவிக்கப்பட்டது.
கருத்து கேட்பு
மனுதாரரின் கோரிக்கையை ஏற்றுக் கொள்ள முகாந்திரம் உள்ளது. இருந்தாலும், இது முதல் வழக்கு என்பதால், விரிவான தீர்ப்பு எழுதுவதற்கு முன்பு அனைத்து வக்கீல்கள் உள்ளிட்டோரின் அனைத்து தரப்பு கருத்துக்களையும் கேட்க விரும்புகிறேன். இந்த வழக்கு வருகிற 28-ந்தேதி பிற்பகல் விசாரணைக்கு எடுக்கப்படும். 
இவ்வாறு அந்த உத்தரவில் அவர் கூறியிருந்தார்.
அதன்படி ஐகோர்ட்டு வக்கீல் சங்கங்களை சேர்ந்த வக்கீல்கள் கடந்த 28-ந்தேதி வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆஜராகினர். இதுசம்பந்தமாக தங்களது ஆதரவு கருத்துக்களை தெரிவித்தனர்.
மனு தள்ளுபடி
இதையடுத்து இந்த வழக்கில் நீதிபதி பிறப்பித்த தீர்ப்பில், “பல்வேறு குற்ற வழக்குகளில் உரிய நடைமுறைகளை பின்பற்றி விசாரணை நடக்காததால் பலர் விடுதலையாகும் நிலை உள்ளது. சமூக வலைதளங்களில் இருந்து குற்ற வழக்குகளில் விடுதலையானவர்களின் தகவல்களை நீக்குவதற்கு வெளிநாடுகளில் உரிய சட்டங்கள் அமலில் உள்ளன.
ஆனால் நமது நாட்டில் தரவு பாதுகாப்பு சட்டம் இன்னும் அமல்படுத்தப்படவில்லை. எனவே மனுதாரரின் கோரிக்கை குறித்து எந்த உத்தரவும் பிறப்பிக்க இயலாது. இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது” என்று கூறினார்.

மேலும் செய்திகள்