ரூ.9 லட்சம் மோசடி செய்த 3 பேர் கைது

ரூ.9 லட்சம் மோசடி செய்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்

Update: 2021-08-03 19:34 GMT
கரூர்
கரூர் மாவட்டம் வெங்கமேடு சின்னகுளத்துபாளையத்தை சேர்ந்தவர் கண்ணையன் (வயது 54). கடந்த 2014-ம் ஆண்டு இவரது செல்போன் எண்ணிற்கு 10 லட்சம் அமெரிக்கன் டாலர் பரிசு தொகை விழுந்திருப்பதாகவும் அந்த பரிசினை பெற உங்களது விவரங்களை குறிப்பிட்ட இ-மெயில் முகவரிக்கு அனுப்ப வேண்டும் என எஸ்.எம்.எஸ் வந்துள்ளது. அதன்பேரில் கண்ணையன் அந்த பரிசு தொகையை பெற அவரது விவரங்களை அவர்களுடைய இ-மெயிலுக்கு அனுப்பி வைத்துள்ளார். பரிசு தொகையை பெருவதற்கு வருமான வரி மற்றும் பல கம்பெனிகளிடமிருந்து சான்று பெற வேண்டும் என கூறி வடமாநிலத்தவர்களின் வங்கிக்கணக்கான டெல்லி வங்கி கிளைகளின் வங்கிக் கணக்கு எண்களுக்கு பணம் அனுப்பி வைக்க சொல்லப்பட்டது.
 இதனையடுத்து கண்ணையன் அவர்கள் கூறிய வங்கி கணக்கிற்கு ரூ.9 லட்சத்து 20 ஆயிரத்தை செலுத்தி உள்ளார். மீண்டும் பணம் அனுப்ப வடமாநிலத்தவர்கள் கேட்டதால் சந்தேகமடைந்த கண்ணையன் வங்கியை அணுகி விவரம் கேட்டுள்ளார். அப்போது தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த, அவர் கரூர் மாவட்ட குற்றப்பிரிவினரிடம் புகார் கொடுத்தார். அவர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த வழக்கானது ஐகோா்ட்டு மதுரை கிளையின் உத்தரவுபடி கரூர் சி.பி.சி.ஐ.டி.க்கு மேல் விசாரணைக்காக மாற்றம் செய்யப்பட்டது. சி.பி.சி.ஐ.டி. இயக்குனர் உத்தரவின்பேரில் கரூர் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் இன்ஸ்பெக்டர் திலகாதேவியின் தலைமையில்  தனிப்படையினர் டெல்லி சென்று கடந்த 30-ந் தேதி டெல்லியை சேர்ந்த முன்வர் நஜார் (26) சொகில் அன்சாரி (24) மகேஸ் (29) ஆகிய 3 பேரை கைது செய்து டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் கடந்த 2-ந்தேதி கரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு குளித்தலை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்