ஆடிப்பெருக்கு நாளில் வெறிச்சோடிய பரமத்திவேலூர் காவிரி ஆறு
கொரோனா பரவலால் மக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் ஆடிப்பெருக்கு நாளில் பரமத்திவேலூர் காவிரி ஆறு வெறிச்சோடி காணப்பட்டது.
பரமத்திவேலூர்,
பரமத்திவேலூர் தாலுகாவில் ஆடி மாதம் பிறந்துவிட்டாலே விவசாயிகளும், பொதுமக்களும் உற்சாகமாகி விடுவர். காவிரியாற்றில் தண்ணீரின் அளவு அதிகரித்து விவசாயம் செழிப்பதோடு, கோவில்களில் பல்வேறு நிகழ்ச்சிகளும் நடைபெறுவது வழக்கம்.
ஆடிப்பெருக்கையொட்டி சேலம், நாமக்கல், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் மகாபாரத கதைகள் பாடி மகிழ்வர். மகாபாரத கதையில் பஞ்சபாண்டவர்களுக்கும், கவுரவர்களுக்கும் நடந்த பாரத போரை குறிக்கும் விதமாக இந்த ஆடிபெருக்கை கொண்டாடி வருகின்றனர்.
யுத்ததில் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களை காவிரியில் சுத்தம் செய்து வெற்றியை கொண்டாடும் வகையில் வேலூர், ஜேடர்பாளையம் ஆகிய பகுதிகளில் காவிரி ஆற்றுக்கு பக்தர்கள் வந்திருந்து வழிபாடு நடத்துவாா்கள். மேலும் சிலர் தங்களது கோவில்களில் உள்ள குல தெய்வத்தின் ஆயுதங்களை எடுத்து வந்து காவிரியில் சுத்தம் செய்தும், தலையில் தேங்காய் உடைத்தும் பூஜையை நிறைவு செய்வார்கள்.
பெண்கள் ஆடி பெருக்கு பண்டிகையன்று 18 நாட்கள் வீட்டில் முளைக்க வைக்கப்பட்ட நவதானியங்களான முளைப்பாரியை கொண்டு வருவர். பின்னர் குடும்பத்தினர், புதுமணத் தம்பதிகள் ஆகியோர் தங்களது தலையில் காசுகளை வைத்து காவிரியில் குளித்து பூஜைகள் செய்வர். தங்களது முன்னோர்களுக்கும், கன்னி தெய்வங்களுக்கும், காவிரி தாய்க்கும் நன்றி செலுத்தும் வகையில் படையலிட்டு வணங்குவர். அந்த முளைப்பாரிகளை ஆற்றில் விடுவார்கள்.
தற்பொழுது கொரோனா பரவலால் காவிரி ஆற்றில் பக்தர்களும் ஒன்று கூடுவதை தடுக்கும் வகையில் புனித நீராடவும், வழிபாடுகள் நடத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளதால் அதிகாலை முதல் காவிரி ஆறு வெறிச்சோடி காணப்பட்டது.
இந்த நிலையில் பல நூற்றாண்டாக நடைபெற்று வந்த மோட்ச தீபம் விடும் நிகழ்ச்சி கோவில் நிர்வாகத்தினர் மட்டும் கலந்து கொண்டு காவிரி ஆற்றில்மோட்ச தீபம் விட்டனர்.
பாதுகாப்பு கருதி பரமத்தி வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜாரணவீரன் தலைமையில் ஏராளமான போலீசார் காவிரி கரையோர பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.