சைக்கிள் ஓட்டி கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்திய கலெக்டர்
கடலூரில் சைக்கிள் ஓட்டி மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
கடலூர்,
கடலூர் மாவட்டத்தில் ஒரு வார காலம் கொரோனா விழிப்புணர்வு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி துண்டுபிரசுரம் வழங்குதல், கலைநிகழ்ச்சி நடத்துதல் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தி பொதுமக்கள் மத்தியில் கொரோனா 3-வது அலை வருவதை தடுக்க விழிப்புணர்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதையொட்டி நேற்று கடலூர் டவுன்ஹாலில் இந்திய மருத்துவ சங்கத்தின் சார்பில் கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உறுதி மொழியை மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் தலைமையில் அனைவரும் ஏற்றுக்கொண்டனர்.
கலெக்டர் சைக்கிள் ஓட்டினார்
தொடர்ந்து கடலூர் டவுன்ஹாலில் இருந்து கொரோனா விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை கலெக்டர் பாலசுப்பிரமணியம் தொடங்கி வைத்தார். அதையடுத்து அவரும் இந்திய மருத்துவ சங்கத்தினர், டாக்டர்கள், செவிலியர்கள் ஆகியோருடன் சைக்கிள் ஓட்டிய படி சென்று பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இந்த பேரணி, பாரதி சாலை வழியாக சென்று அண்ணாபாலம் அருகே சென்று மீண்டும் டவுன்ஹாலை வந்தடைந்தது.
இதில் கூடுதல் கலெக்டர் (வருவாய்) ரஞ்ஜீத்சிங், கூடுதல் கலெக்டரும், திட்ட இயக்குனருமான பவன்குமார் ஜி.கிரியப்பனவர், வருவாய் கோட்டாட்சியர் அதியமான் கவியரசு, நலப்பணிகள் இணை இயக்குனர் ரமேஷ்பாபு, சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் செந்தில்குமார், தேசிய சுகாதார திட்ட ஒருங்கிணைப்பாளர் காரல், இந்திய மருத்துவ சங்கத்தலைவர் பாண்டியன், செயலாளர் முகுந்தன், சுரேந்திரா பல்நோக்கு மருத்துவமனை டாக்டர் நடராஜன் மற்றும் டாக்டர்கள், இந்திய மருத்துவசங்கத்தினர், பயிற்சி செவிலியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.