பூட்டி இருந்த கோவில்கள் முன்பு திரண்ட பக்தர்கள்

கொரோனா தொற்று காரணமாக கோவில்களில் சாமி தரிசனத்துக்கு அரசு தடை விதித்து உள்ளது. நேற்று ஆடிப்பெருக்கு என்பதால் பூட்டி இருந்த கோவில்கள் முன்பு பக்தர்கள் திரண்டனர். பெண்கள் புதிய மஞ்சள் கயிற்றை அணிந்து கொண்டனர்.

Update: 2021-08-03 18:17 GMT

காரைக்குடி,



ஆடிப்பெருக்கு அன்று புதிய நகை, மோட்டார் சைக்கிள், கார் உள்ளிட்ட வாகனங்கள் வாங்க பொதுமக்கள் ஆர்வம் காட்டுவார்கள். அதன்படி நேற்று ஆடிப்பெருக்கு என்பதால் நகைக்கடைகள், ஜவுளிக்கடைகள், மோட்டார் வாகன ஷோரூம்களில் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.கொரோனா 3-வது அலையை கட்டுப்படுத்துவதற்காக கோவில்களில் பக்தர்கள் கூட்டம் கூடுவதால் பொது தரிசனத்துக்கு அரசு தடை விதித்தது. அதனால் நேற்று ஆடிப்பெருக்கு தினத்தன்று கோவில்களில் பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது
.
பூட்டிய கோவில் முன்பு...

இருப்பினும் பூட்டிய கோவில்கள் முன்பு பக்தர்கள் திரண்டு கோபுரத்தை வணங்கி தரிசனம் செய்தனர். கோவில் முன்பு சூடம், தீபம் ஏற்றி வழிபட்டனர். சிவகங்கை மாவட்டத்தை பொறுத்தவரை மடப்புரம் அடைக்கலம் காத்த அய்யனார் மற்றும் பத்ரகாளியம்மன் கோவில், பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோவில், தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோவில், குன்றக்குடி சண்முகநாதசுவாமி கோவில், காளையார்கோவில் சொர்ணகாளீஸ்வரர் கோவில், வெட்டுடையார் கோவில் உள்ளிட்ட கோவில்கள் பூட்டப்பட்டு இருந்தன. பக்தர்கள் கோவில் முன்பு திரண்டு வழிபட்டனர்.சிவகங்கை ஆவரங்காடு முத்துமாரியம்மன் கோவிலில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு அம்மனுக்கு மீனாட்சி அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. சிவகங்கை காசி விசுவநாத சுவாமி கோவிலில் உள்ள கருப்பர் சுவாமிக்கு ஆடிப்பெருக்கை முன்னிட்டு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடைபெற்றன.

தாலி கயிறு அணிந்த பெண்கள்

காரைக்குடி கொப்புடைய நாயகி அம்மன் கோவில் பூட்டப்பட்டு இருந்ததால் கோபுரத்தை தரிசித்த பெண்கள் கோவில் தெப்பக்குளம் படித்துறை பகுதியில் அர்ச்சனை செய்து புதிய மஞ்சள் கயிற்றை(தாலி கயிறு) தங்கள் கழுத்தில் அணிந்து கொண்டனர். காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோவில் முன்பு பெண்கள் மஞ்சள் கயிற்றை அணிந்து கொண்டனர்.காரைக்குடி கணேசபுரம் மாரியம்மன் கோவிலில் ஆடிப்பெருக்கு விழாவையொட்டி 108 பெண்கள் கலந்துகொண்ட சுமங்கலி பூஜை  நடைபெற்றது.
இதையொட்டி அம்மன் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பல்வேறு பூஜைகள் நடைபெற்றது. இதேபோல் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து பிரசித்தி பெற்ற கோவில்களிலும் நேற்று பக்தர்கள் கோவில்கள் முன்பு விளக்கேற்றி சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் கிராமங்களில் ஆடி பெருக்கையொட்டி விவசாயிகள் தங்களது வயல்களில் ஏர்பூட்டி உழவு செய்யும் பணிகளில் மேற்கொண்டனர்.
சிங்கம்புணரி அருகே வேட்டையன்பட்டியில் உள்ள காமாட்சி பரமேஸ்வரி அம்மன் கோவிலில் பக்தர்கள் அனுமதியின்றி ஆடி திருவிழா நடைபெற்று வருகிறது. இதைெயாட்டி ஆடிப்பெருக்கையொட்டி சந்தன காப்பு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார். திருவிழாவையொட்டி சமூக இடைவெளியை பின்பற்றி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

மேலும் செய்திகள்