பெண்ணிடம் ரூ.95 ஆயிரம் லஞ்சம் கேட்ட பெண் சப்-இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம்

கணவருடன் சேர்த்து வைப்பதாக கூறி பெண்ணிடம் ரூ.95 ஆயிரம் லஞ்சம் கேட்ட பெண் சப்-இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதற்கான உத்தரவை தஞ்சை சரக டி.ஐ.ஜி. பிரவேஷ்குமார் பிறப்பித்தார்.

Update: 2021-08-03 18:01 GMT
நாகப்பட்டினம்:
கணவருடன் சேர்த்து வைப்பதாக கூறி பெண்ணிடம் ரூ.95 ஆயிரம் லஞ்சம் கேட்ட பெண் சப்-இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதற்கான உத்தரவை தஞ்சை சரக டி.ஐ.ஜி. பிரவேஷ்குமார் பிறப்பித்தார். 
கணவருடன் சேர்த்து வைக்க...
நாகை மாவட்டம் திட்டச்சேரி பகுதியை சேர்ந்தவர் உமா(வயது 20). இவர் பிரிந்து சென்ற தனது கணவரை தன்னுடன் சேர்த்து வைக்கக் கோரி நாகை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு புகார் செய்தார். இந்த புகாரை பெற்றுக்கொண்ட நாகை அனைத்து மகளிர் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் வேம்பு, கணவரை சேர்த்து வைப்பதாக கூறி உமாவிடம் ரூ.1 லட்சம் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது. 
ஆனால் அவ்வளவு தொகையை தன்னால் தர முடியாது என்று உமா கூறியுள்ளார். இதன் பின்னர் ரூ.95 ஆயிரம் பணம் கொடுக்க உமா சம்மதம் தெரிவித்துள்ளார். 
ரூ.95 ஆயிரம் லஞ்சம் கேட்டார்
ஆனால் உமா தரப்பில் இருந்து பணம் வராத காரணத்தால் பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு உமா மீண்டும் நாகை அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் வந்தார். 
அப்போது சப்-இன்ஸ்பெக்டர் வேம்பு ஏற்கனவே ஒப்புக்கொண்டபடி ரூ.95 ஆயிரம் பணத்தை உமாவிடம் கேட்டுள்ளார். 
பணியிடை நீக்கம்
இதை உமா தனது செல்போனில் பதிவு செய்து போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு புகார் அளித்தார். இந்த புகாரை விசாரித்த தஞ்சை சரக போலீஸ் டி.ஐ.ஜி. பிரவேஷ் குமார், லஞ்சம் கேட்டதாக நாகை அனைத்து மகளிர் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் வேம்புவை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்