ஊட்டிக்கு, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வருகை

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், 4 நாள் சுற்றுப்பயணமாக ஊட்டிக்கு நேற்று வந்தார். அவரை கவர்னர் பன்வாரில் புரோகித், அமைச்சர்கள் வரவேற்றனர்.

Update: 2021-08-03 17:18 GMT
ஊட்டி

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், 4 நாள் சுற்றுப்பயணமாக ஊட்டிக்கு நேற்று வந்தார். அவரை கவர்னர் பன்வாரில் புரோகித், அமைச்சர்கள் வரவேற்றனர்.

ஜனாதிபதி தமிழகம் வருகை

தமிழக சட்டசபை நூற்றாண்டு விழா மற்றும் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் மு.கருணாநிதியின் உருவப்படம் திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக 5 நாட்கள் சுற்றுப்பயணமாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று முன்தினம் விமானம் மூலம் சென்னை வந்தார். 

பின்னர் சட்டசபை நூற்றாண்டு விழா மற்றும் கருணாநிதியின் உருவப்படம் திறப்பு விழாவில் பங்கேற்ற பிறகு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் இரவு ஓய்வு எடுத்தார்.

அதன் தொடர்ச்சியாக 4 நாள் சுற்றுப்பயணமாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், நேற்று காலை நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு சிறப்பு விமானத்தில் புறப்பட்டார். சென்னை விமான நிலையத்தில் புறப்பட்ட அவர் கோவையை அடுத்த சூலூர் விமானப்படை தளத்துக்கு காலை 10.50 மணியளவில் வந்து இறங்கினார். அவருடன் மனைவி சவீதா கோவிந்த், மகள் சுவாதி ஆகியோரும் வந்திருந்தனர்.

கோவையில் வரவேற்பு

கோவை வந்த ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை, தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் இருகரம் கூப்பி வரவேற்றார். அதைத்தொடர்ந்து அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, சு.முத்துசாமி, மு.பெ.சாமிநாதன், கயல்விழி செல்வராஜ், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அரசு செயலாளர் குமார் ஜெயந்த், கோவை மாவட்ட கலெக்டர் சமீரன், மேற்கு மண்டல ஐ.ஜி. சுதாகர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வநாகரத்தினம் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

இதைத்தொடர்ந்து அங்கு தயார்நிலையில் இருந்த விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் ஜனாதிபதி நீலகிரிக்கு புறப்பட்டார் அவருடன் அவரது குடும்பத்தினரும், கவர்னர் பன்வாரிலால் புரோகித்தும் சென்றனர். 

ஊட்டிக்கு வந்தார்

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், ஊட்டி தீட்டுக்கல் ஹெலிகாப்டர் தளத்துக்கு காலை 11.45 மணிக்கு வந்தடைந்தார். அவரை தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், தமிழக அரசு சார்பில் தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன், நீலகிரி கலெக்டர் இன்னசென்ட் திவ்யா ஆகியோர் வரவேற்றனர். 

அப்போது போலீஸ் கூடுதல் டி.ஜி.பி. தாமரை கண்ணன் உடனிருந்தார். தொடர்ந்து தீட்டுக்கல் தளத்தில் இருந்து கார் மூலம் கலெக்டர் அலுவலக சந்திப்பு வழியாக ஊட்டி ராஜ்பவனை மதியம் 12.10 மணிக்கு சென்றடைந்தார்.

5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு

இதையொட்டி மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. சுதாகர், உள்நாட்டு பாதுகாப்பு பிரிவு ஐ.ஜி. ஈஸ்வரமூர்த்தி, கோவை சரக டி.ஐ.ஜி. முத்துசாமி மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து 1,240 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

ஊட்டிக்கு ஜனாதிபதி வருகையையொட்டி ராஜ்பவன், ஊட்டி, வெலிங்டன் உள்ளிட்ட இடங்களில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. 

ராணுவ நிகழ்ச்சி

ஊட்டி ராஜ்பவனில் தங்கியிருக்கும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், குன்னூர் வெலிங்டன் ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில் இன்று (புதன்கிழமை) நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். அங்கு முப்படை அதிகாரிகளுடன் கலந்துரையாடல் நடத்துகிறார்.

இதற்காக காலை 9.50 மணிக்கு ராஜ்பவனில் இருந்து காரில் புறப்பட்டு வெலிங்டன் ராணுவ கல்லூரிக்கு 10.20 மணிக்கு செல்கிறார். அங்கு நடைபெறும் நிகழ்ச்சியில் மதியம் 12 மணி வரை பங்கேற்கிறார். 

பின்னர் அங்கிருந்து ராஜ்பவன் திரும்புகிறார். இதையொட்டி வெலிங்டன் பகுதியில் ராணுவ வீரர்கள் துப்பாக்கி ஏந்தி பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். ராணுவ பகுதி என்பதால் பிற வாகனங்கள் உள்ளே அனுமதிக்கப்பட வில்லை.

நாளை (வியாழக்கிழமை) ராஜ்பவனில் ஓய்வெடுக்கிறார். நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) ஊட்டியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கோவை சூலூர் விமானப்படை தளத்துக்கு வரும் ஜனாதிபதி, அங்கிருந்து சிறப்பு விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு செல்கிறார்.

மேலும் செய்திகள்