தடுப்பூசி விழிப்புணர்வு தொடர்பாக கோலங்கள் வரைந்து அசத்தல்
திருவண்ணாமலையில் கொரோனா தடுப்பூசி விழிபிபுணர்வு தொடர்பாக கோலங்கள் வரைந்து பெண்கள் அசத்தினர். அவர்கள் வரைந்த கோலங்களை கலெக்டர் முருகேஷ் நேரில் பார்வையிட்டு பாராட்டினார்.
திருவண்ணாமலை
திருவண்ணாமலையில் கொரோனா தடுப்பூசி விழிபிபுணர்வு தொடர்பாக கோலங்கள் வரைந்து பெண்கள் அசத்தினர். அவர்கள் வரைந்த கோலங்களை கலெக்டர் முருகேஷ் நேரில் பார்வையிட்டு பாராட்டினார்.
தடுப்பூசி விழிப்புணர்வு
வேங்கிக்கால் ஊராட்சியில் திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் எதிரில் உள்ள அறிவியல் பூங்காவில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்வது தொடர்பாக மகளிர் திட்டம் சார்பில் விழிப்புணர்வு பிரசாரம் நேற்று மாலை நடைபெற்றது. இதில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஒன்றியங்களை சேர்ந்த மகளிர் குழுவினர் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்வது தொடர்பாக விழிப்புணர்வு கோலங்கள் வரைந்து இருந்தனர்.
மேலும் விழிப்புணர்வு கிராமிய கலை நிகழ்ச்சியும் நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட கூடுதல் கலெக்டர் பிரதாப், மகளிர் திட்டம் திட்ட இயக்குனர் சந்திரா ஆகியோர் முன்னிலை வகித்தனர். உதவி கலெக்டர் (பயிற்சி) அஜிதாபேகம் வரவேற்றார்.
கலெக்டர் பாராட்டு
திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் முருகேஷ் தலைமை தாங்கி மகளிர் குழுக்கள் சார்பில் வரையப்பட்டு இருந்த கோலங்களை நேரில் சென்று பார்வையிட்டு கோலம் வரைந்தவர்களை பாராட்டி வாழ்த்தினார். பின்னர் கலை நிகழ்ச்சியை பார்வையிட்டார்.
இதையடுத்து அவர் பூங்காவுக்கு வந்த பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார்.
தொடர்ந்து கலெக்டர் கூறுகையில், இதுவரை திருவண்ணாமலை நகராட்சியில் 55 சதவீதம் பேர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். அதுமட்டுமின்றி மாவட்டத்தில் 33 சதவீத பேர் தடுப்பூசி போட்டு கொண்டு உள்ளனர். அதனால் இன்னும் ஒரு மாதத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் சுமார் 90 சதவீத பேர் தடுப்பூசி போட்டு கொண்டவர்களாக இருப்பார்கள்.
வணிகர்களுடன் ஆய்வு கூட்டம்
வணிகர்கள் பலர் தடுப்பூசி போட வில்லை என வந்த தகவலை அடுத்து பல்வேறு வணிகர்கள் சங்கங்களுடன் ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டது. வணிகர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மேலும் நடமாடும் தடுப்பூசி போடும் வாகனம் மூலம் கடை, கடையாக சென்று வணிகர்களுக்கு தடுப்பூசி போடவும் திட்டம் உள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் 3-ம் அலை கொரோனா வந்தால் அதற்கு தேவையான அனைத்து மருத்துவ கட்டமைப்பும் தயார் நிலையில் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் நலப்பணிகள் இணை இயக்குனர் கண்ணகி, உதவி கலெக்டர் வெற்றிவேல், அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் ஜெயக்குமார், கண்காணிப்பாளர் குப்புராஜ், திருவண்ணாமலை ஒன்றிய ஆணையர் அமிர்தராஜ்