சேலம் மாவட்டத்தில் ஒரே நாளில் 82 பேருக்கு கொரோனா-4 பேர் பலி
சேலம் மாவட்டத்தில் ஒரே நாளில் 82 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும் 4 பேர் பலியானார்கள்.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் ஒரே நாளில் 82 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும் 4 பேர் பலியானார்கள்.
82 பேருக்கு கொரோனா
சேலம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு தற்போது அதிகரித்து வருகிறது. இதனால் வீடுகளில் இருந்து வெளியில் செல்லும் பொதுமக்கள் கட்டாயம் முககவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைபிடிக்குமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
மாவட்டத்தில் கடந்த 1-ந் தேதி 73 பேரும், நேற்று முன்தினம் 79 பேரும் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், நேற்று புதிதாக 82 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
பாதிப்பு
சேலம் மாநகராட்சி பகுதிகளில் 21 பேர், எடப்பாடி- 8 பேர், காடையாம்பட்டி- 3 பேர், கொளத்தூர், ஆத்தூர், மேச்சேரியில் தலா 4 பேர், நங்கவள்ளி-8, ஓமலூர் மற்றும் சங்ககிரியில் தலா 5 பேர் உள்பட மாவட்டம் முழுவதும் நேற்று 82 பேர் நோய் தொற்றுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 93 ஆயிரத்து 562 ஆக அதிகரித்துள்ளது.
4 பேர் பலி
மேலும், ஆஸ்பத்திரிகளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 113 பேர் குணமடைந்துவிட்டதால் அவர்கள் நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால் 1,061 பேர் மட்டும் ஆஸ்பத்திரிகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சேலம் மாவட்டத்தை சேர்ந்த 4 பேர் கொரோனா பாதிப்பால் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தனர். இதன்மூலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு இதுவரை 1,562 பேர் உயிரிழந்துள்ளனர்.