போக்குவரத்து விதிமுறைகளை மீறிய 8 வாகனங்கள் பறிமுதல்
போக்குவரத்து விதிமுறைகளை மீறிய 8 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா உத்தரவின் பேரில், பெரம்பலூர் வட்டார போக்குவரத்து அலுவலர் பழனிசாமி தலைமையில், மோட்டார் வாகன ஆய்வாளர் நிலை-1 செல்வகுமார் மற்றும் போலீசார் பெரம்பலூர், குன்னம், அரும்பாவூர் ஆகிய போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பெரம்பலூரில் தகுதிச்சான்று, காப்பீட்டு சான்று, ஓட்டுனர் உரிமம் இல்லாமல் இயக்கப்பட்ட 4 சரக்கு வாகனங்களும், ஒரு ஆட்டோவும் பறிமுதல் செய்யப்பட்டது.
இதேபோல் குன்னம் பகுதியில் 2 ஆண்டு சாலை வரி செலுத்தாமல் இயங்கி வந்த ஒரு பொக்லைன் எந்திரமும், தகுதி சான்று இல்லாமல் இயங்கி வந்த சரக்கு வாகனம் ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டது. அரும்பாவூர் பகுதியில் சாலை வரி செலுத்தாமலும், ஓட்டுனர் உரிமம், தகுதி சான்று, புகை சான்று ஆகியவை இல்லாமலும் இயங்கிய 2 கனரக சரக்கு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் அதிக பாரம் ஏற்றிச்சென்ற 5 கனரக வாகனங்களுக்கு சோதனை அறிக்கை வழங்கப்பட்டது. மேற்கொண்ட வாகன சோதனையில் அபராதமாக ரூ.2 லட்சத்து 25 ஆயிரம் விதிக்கப்பட்டது. இதில் சாலை வரி அபராதம் ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் வசூலிக்கப்பட்டது. மேலும் இது போன்ற வாகன சோதனை தொடரும் என்று வட்டார போக்குவரத்து அலுவலர் தெரிவித்தார்.