கடந்த மாதம் மட்டும் 144 ரவுடிகள் மீது வழக்குப்பதிவு
மதுரை நகரில் கடந்த மாதம் மட்டும் 144 ரவுடிகள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் 7 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மதுரை, ஆக
மதுரை நகரில் கடந்த மாதம் மட்டும் 144 ரவுடிகள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் 7 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
144 ரவுடிகள் மீது நடவடிக்கை
மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மாநகர போலீஸ் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்கா உத்தரவுப்படி நகரில் குற்றச்செயல்களில் ஈடுபடும் ரவுடிகள் மீது பல்வேறு குற்றத்தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த ஜூலை மாதம் மட்டும் 144 ரவுடிகள் மீது வழக்குள் பதிவு செய்யப்பட்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் குற்றப்பின்னணி உடைய நபர்கள் மற்றும் ரவுடிகள் 237 பேர் மீது 110 விதிகளின் படி நன்னடத்தை பத்திரம் பெறப்பட்டுள்ளது. நன்னடத்தை காலத்தில் அந்த விதிமுறைகளை மீறி குற்றச்செயல்களில் ஈடுபட்ட 23 எதிரிகள் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். அது தவிர கடந்த மாதம் முக்கிய ரவுடிகளான லோடு முருகன், காளீஸ்வரன், காளி, கண்ணன், முனியசாமி, முத்துராமலிங்கம் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
குண்டர் சட்டம்
கடந்த ஜூலை மாதத்தில் 7 ரவுடிகள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த ஆண்டில் இது வரை 44 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் கடந்த மாதத்தில் மட்டும் 52 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இது வரை 771 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
நகரில் ரவுடிகளின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் வகையில் 32 போலீசார் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதத்துடன் ரோந்து பணியில் சுழற்சி முறையில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் அவர்களுக்கு நவீன கேமரா வழங்கப்படும். சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் ரவுடிகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.