சினிமா தியேட்டர்கள் திறக்க கோரி கலெக்டர் அலுவலகத்தில் மனு

சினிமா தியேட்டர்கள் திறக்க கோரி நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் தொழிலாளர்கள் மனு கொடுத்தனர்.

Update: 2021-08-02 19:50 GMT
நெல்லை:
நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களை சேர்ந்த திரையரங்கு தொழிலாளர்கள் நலச்சங்க தலைவர் டேவிட் ஆரோக்கியராஜ், செயலாளர் மாரியப்பன், பொருளாளர் சப்பானி மற்றும் திரையரங்கு ஊழியர்கள் நேற்று நெல்லை கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அங்கு அவர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலக பெட்டியில் போட்ட மனுவில் கூறிஇருப்பதாவது:-

கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் கொரோனா ஊரடங்கால் சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டன. தற்போது வரை தியேட்டர்கள் திறக்கப்படவில்லை. இதனால் அங்கு வேலை செய்து வந்த ஆபரேட்டர் உள்ளிட்ட தொழிலாளர்கள் வாழ்வாதாரம் இழந்த நிலையில் உள்ளோம். குடும்பத்தினரும் மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். எனவே தியேட்டர் ஊழியர்களுக்கு என தனி நலவாரியம் அமைக்கப்பட்டு உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும். மேலும் தியேட்டர்களை திறக்க அனுமதிக்க வேண்டும். அல்லது குறிப்பிட்ட காட்சிகளுக்கு மட்டுமாவது திறக்க அனுமதிக்க வேண்டும். எங்களுக்கு நிவாரண உதவிகளும் வழங்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறி இருந்தனர்.

மாவீரர் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்க தலைவர் மாரியப்ப பாண்டியன் தலைமையில் அந்த கட்சியினர் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில், “ராமையன்பட்டி சைமன்நகர் பகுதியில் ஆதிதிராவிடர் நலத்துறையால் ஏழை மக்களுக்கு வழங்கப்பட்ட வீட்ட மனைகள் உள்ளன. இந்த பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். எங்கள் பகுதியில் இருந்து வேப்பங்குளம் செல்லும் தெருப்பாதையை அடைத்து, தனியார் செல்போன் கோபுரம் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. எனவே தெருப்பாதையை திறந்து, செல்போன் கோபுரம் அமைப்பதை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும்” என்று கூறப்பட்டு உள்ளது.

திராவிட தமிழர் கட்சி நெல்லை மாவட்ட செயலாளர் திருக்குமரன் தலைமையில் கொடுத்த மனுவில், ‘‘நெல்லை சி.என்.கிராமம், பாபுஜி காலனி, ராஜேந்திரநகர் பகுதியில் வசிக்கும் அருந்ததியர் குடும்பங்களுக்கு அரசு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும்’’ என்று கூறப்பட்டு இருந்தது.

மானூர் அருகே உள்ள நாஞ்சான்குளத்தை சேர்ந்த மூக்கன் மகள்கள் பானுமதி, கலையரசி, முகேஷ்வரி உள்ளிட்டோர் கொடுத்த மனுவில், “எங்களுடைய தந்தை மூக்கன் கடந்த மாதம் இறந்து விட்டார். அதனால் வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் எங்கள் குடும்பத்துக்கு நிவாரணம் அளிப்பதுடன், அரசு வேலைவாய்ப்பும் வழங்க வேண்டும்’’ என்று கூறிஇருந்தனர். இதேபோல் பல்வேறு தரப்பினர் கோரிக்கை மனுக்களை கலெக்டர் அலுவலக பெட்டியில் போட்டனர்.

மேலும் செய்திகள்