வெவ்வேறு விபத்துகளில் ஆசிரியர், என்ஜினீயர் உள்பட 3 பேர் பலி

நெல்லை மாவட்டத்தில் வெவ்வேறு விபத்துகளில் ஆசிரியர், என்ஜினீயர் உள்பட 3 பேர் பரிதாபமாக இறந்தனர்.

Update: 2021-08-02 19:34 GMT
நெல்லை:
பாளையங்கோட்டை சமாதானபுரம் மிலிட்டரி லைனை சேர்ந்தவர் எபனேசர் சாமுவேல் (வயது 48). இவர் நாங்குநேரியில் உள்ள அரசு பள்ளிக்கூடத்தில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் அவர் நேற்று முன்தினம் இரவு நெல்லை பகுதியில் நடந்த ஒரு ஜெப கூட்டத்துக்கு சென்று விட்டு, நேற்று அதிகாலை 2 மணி அளவில் தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். நெல்லை வண்ணார்பேட்டை மேம்பாலம் பகுதியில் சென்றபோது மோட்டார் சைக்கிளில் இருந்து நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த எபனேசர் சாமுவேலை அக்கம்பக்த்தினர் மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாளையங்கோட்டை அருகே உள்ள கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் சீதாராமன். இவருடைய மனைவி பானுமதி (60). இவர் பாரதிநகர் விலக்கு பகுதியில் இட்லி கடை நடத்தி வந்தார். சம்பவத்தன்று பானுமதி வியாபாரம் முடிந்து வீட்டிற்கு செல்வதற்காக, அந்த பகுதியில் உள்ள ரோட்டை கடக்க முயன்றார். அப்போது அந்த பகுதியில் வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக பானுமதி மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி பானுமதி நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து சிவந்திபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திசையன்விளை வடக்கு தெருவை சேர்ந்தவர் பொன்னு. இவரது மகன் சிவா பிரேம் (31). பி.இ. படித்துள்ள இவர் சென்னையில் உள்ள ஒரு மருத்துவமனையில் பணியாற்றி வந்தார். விடுமுறையில் ஊருக்கு வந்திருந்த அவர் நேற்று முன்தினம் மோட்டார் சைக்கிளில் நண்பர்களை பார்க்க சென்றார். திசையன்விளை ஆலமரத்து சுடலை ஆண்டவர் கோவில் அருகே சென்றபோது, எதிர்பாராதவிதமாக அங்குள்ள ஒரு வீட்டின் மதில் சுவர் மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தார். உடனே அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு திசையன்விளை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து திசையன்விளை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விபத்தில் இறந்த சிவா பிரேம் கூடுதாழையை சேர்ந்த ஷீபானி (30) என்பவரை காதல் திருமணம் செய்து இருந்தார். இந்த தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. 

மேலும் செய்திகள்