உளுந்தூர்பேட்டையில் சுங்கச்சாவடி அலுவலகத்துக்கு சீல் வைக்க வந்த அதிகாரிகளால் பரபரப்பு
உளுந்தூர்பேட்டையில் சுங்கச்சாவடி அலுவலகத்துக்கு சீல் வைக்க வந்த அதிகாரிகளால் பரபரப்பு
உளுந்தூர்பேட்டை
கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் திருநாவலூர் வட்டார சுகாதார ஆய்வாளர்கள் 10-க்கும் மேற்பட்டோர் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது சுங்கச்சாவடியில் பணிபுரியும் ஊழியர்கள் முககவசங்களை முறையாக அணியாமலும், அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்காமலும் பணிபுரிந்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுகுறித்து சுங்கச்சாவடி நிர்வாகத்திடம் கேட்டபோது முறையான பதில் அளிக்காததால் சுங்கச்சாவடி ஊழியர்களுக்கும், சுகாதார துறையினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இது குறித்து தகவலறிந்து வந்த உளுந்தூர்பேட்டை தலைமையிடத்து துணை தாசில்தார் நடராஜன் தலைமையிலான வருவாய்த் துறையினர் மற்றும் போலீசார் கொரோனா விதிமுறைகளை முறையாக கடைபிடிக்க வில்லை எனக்கூறி சுங்கச்சாவடி அலுவலகத்திற்கு சீல் வைக்க முயன்றனர். அப்போது அங்கிருந்த சுங்கச்சாவடி ஊழியர்கள் கொரோனா விதிமுறைகளை முறையாகப் பின்பற்றுவோம், தங்களின் தவறுக்கு மன்னிப்பு கேட்பதாகவும் தெரிவித்தனர். இதையடுத்து அவர்களை சுகாதாரத்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் எச்சரித்து விட்டு வந்தனர்.