சாலையோர கடைகளுக்கு மீண்டும் அனுமதி அளிக்க வேண்டும் வியாபாரிகள் மனு

காரமடை அரங்கநாதர் கோவில் அருகே சாலையோர கடைகளுக்கு மீண்டும் அனுமதி அளிக்க வேண்டும் என்று வியாபாரிகள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

Update: 2021-08-02 17:08 GMT
கோவை

காரமடை அரங்கநாதர் கோவில் அருகே சாலையோர கடைகளுக்கு மீண்டும் அனுமதி அளிக்க வேண்டும்.என்று வியாபாரிகள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

பொதுமக்கள் மனு

கோவை கலெக்டர் அலுவலகத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏராளமான பொதுமக்கள் மனு அளிக்க வந்தனர். கொரோனா அச்சம் காரணமாக பொதுமக்களிடம் இருந்து மனுக்களை அதிகாரிகள் நேரிடையாக வாங்கவில்லை. 

இதனால் பொதுமக்கள் கலெக்டர் அலுவலக வளாகத்தில் வைத்திருந்த பெட்டியில் தங்களது மனுக்களை போட்டுச் சென்றனர்.

காரமடை அரங்கநாதர் கோவில் சாலையோரத்தில் கடை வைத்து உள்ள இந்து வியாபாரிகள் நலச்சங்கத்தினர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

கடைகள் வைக்க அனுமதி 

காரமடை அரங்கநாதர் கோவிலின் எதிர்புறம் 30 பேர் பொறி, பூக்கள், அல்வா, திருநீறு, நாமக்கட்டி உள்ளிட்டவற்றை விற்பனை செய்யும் கடைகள் நடத்தி வந்தோம். 

இந்த நிலையில் கடந்த 26-ந் தேதி எவ்வித முன்அறிவிப்பும் இன்றி இந்த கடைகள் பேரூராட்சி நிர்வாகத்தால் அகற்றப்பட்டது. இதனால் இந்த கடைகளை நம்பி உள்ள நாங்கள் வருமானம் இல்லாமல் பாதிக்கப்பட்டு உள்ளோம். 

அத்துடன் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியவில்லை. நாங்கள் பக்தர்களுக்கும், போக்குவரத்திற்கும் எவ்வித இடையூறும் இன்றி வியாபாரம் செய்கின்றோம். 

எனவே மீண்டும் எங்களுக்கு அங்கேயே உரிய வழிகாட்டு நெறிமுறைகளுடன் கடைகள் வைத்து கொள்ள அனுமதிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது. 

ரேஷன் அரிசி வழங்க கோரிக்கை

பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள நாயக்கன்பாளையத்தை சேர்ந்த மூதாட்டிகள் 8 பேர் கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனுவில், நாங்கள் முதியோர் ஓய்வூதியம் பெற்று வருகிறோம். 

மேலும் ரேஷன் கடையில் 29 கிலோ ரேஷன் அரிசி வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் ரேஷன்கார்டு இல்லை என்று கூறி எங்களுக்கு தற்போது ரேஷன் அரிசி தர மறுக்கின்றனர். எனவே இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இருந்தது.

இதுகுறித்து உணவு வழங்கல்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, சம்பந்தப்பட்ட மூதாட்டிகள் இதுவரை ஆதார் அட்டை எடுக்காமல் இருப்பதால் அவர்களின் ரேஷன் கார்டுடன், ஆதார் எண் இணைக்கப்படவில்லை.

 தற்போது ரேஷன் கடையில் கைரேகை அடிப்படையில் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. எனவே அந்த மூதாட்டிகளுக்கு ஆதார் கார்டு எடுக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளது என்றார். 

மேலும் செய்திகள்