காட்பாடியில் வீடு புகுந்து கத்திமுனையில் ஆசிரியரை தாக்கி 6 பவுன் நகை பறிப்பு

காட்பாடியில் நள்ளிரவில் கதவை தட்டி வீடு புகுந்த முகமூடி கும்பல் கத்தி முனையில் பள்ளி ஆசிரியரை தாக்கி 6 பவுன் நகையை பறித்து சென்றது.

Update: 2021-08-02 16:52 GMT
காட்பாடி

பள்ளி ஆசிரியர்

வேலூரை அடுத்த காட்பாடி ராமதாஸ் நகரை சேர்ந்தவர் மனோகரன். தனியார் பள்ளி ஆசிரியர். இவருடைய மனைவி கனிமொழி. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். அனைவரும் நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர்.

நள்ளிரவில் 2 மோட்டார் சைக்கிள்களில் 7 பேர் கொண்ட கும்பல் முகமூடி அணிந்து அங்கு வந்தனர். அந்த கும்பல் ஆசிரியர் வீட்டின் கதவை தட்டினர். சத்தம் கேட்டு கண்விழித்த மனோகரன் வீட்டு கதவை திறந்தார்.

கத்திமுனையில் நகை பறிப்பு

அப்போது தயாராக இருந்த கொள்ளை கும்பல் கண்ணிமைக்கும் நேரத்தில் மனோகரனை வீட்டுக்குள் தள்ளி தாக்கினர். மேலும் கத்தியை காட்டி மிரட்டி அவர் அணிந்திருந்த செயின், மோதிரம் உள்ளிட்ட 6 பவுன் நகைகளை பறித்தனர். இதனால் மனோகரனின் மனைவி மற்றும் மகள்கள் அலறி கூச்சலிட்டனர்.

உடனே சுதாரித்துக்கொண்ட கொள்ளை கும்பல் அங்கிருந்து மோட்டார் சைக்கிள்களில் மின்னல் வேகத்தில் தப்பிச்சென்றனர்.

போலீசார் விசாரணை

இந்த சம்பவம் குறித்து காட்பாடி போலீசில் ஆசிரியர் மனோகரன் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் இரண்டு மோட்டார் சைக்கிள்களில் 7 பேர் செல்லும் காட்சி பதிவாகி உள்ளது. எனவே இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் அவர்கள்தானா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொள்ளை கும்பலை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. அவர்கள் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காட்பாடியில் முகமூடி கும்பல் வீடு புகுந்து ஆசிரியரை தாக்கி கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்