திண்டிவனத்தில் துணிகரம்: அடகுகடைக்காரர் வீட்டில் ரூ.7 லட்சம் நகை கொள்ளை
திண்டிவனத்தில் அடகுகடைக்காரர் வீட்டில் ரூ.7 லட்சம் மதிப்புள்ள நகையை கொள்ளையடித்து சென்ற மர்ம மனிதர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனா்.
திண்டிவனம்,
திண்டிவனம் பெலாகுப்பம் ரோடு வெங்கடாஜலபதி நகரை சேர்ந்தவர் முனுசாமி மகன் கணேசன் (வயது 38). அடகு கடைக்காரர். இவர் கடந்த 31-ந்தேதி நண்பர்களுடன் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சென்றார். இதனால் இவரது மனைவி தேவி, அவரது சொந்த ஊரான திண்டிவனம் அடுத்த அய்யந் தோப்பு பகுதிக்கு சென்றுவிட்டார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம், கோவிலில் இருந்து திரும்பி வருவதாகவும், இரவில் வீட்டுக்கு வந்துவிடுவேன் என்று கணேசன் தேவிக்கு போன் செய்து தெரிவித்தார்.
நகை, பணம் கொள்ளை
அதன்பேரில், நேற்று முன்தினம் மாலையில் தேவி, பெலாக்குப்பத்தில் உள்ள வீட்டுக்கு வந்தார். அப்போது, அவரது வீட்டு முன்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர், உள்ளே சென்று பார்த்தார். அங்கிருந்த பீரோ கதவு திறந்த நிலையில் பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்தன.
மேலும், அதில் இருந்த 20 பவுன் நகை, ரூ.20 ஆயிரம் ஆகியவற்றை காணவில்லை. மர்ம மனிதர்கள் கொள்ளையடித்து சென்று இருப்பது தெரியவந்தது. கொள்ளை போன பொருட்களின் மதிப்பு ரூ.7 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.
போலீஸ் வலைவீச்சு
இதுபற்றி அவர், ரோசனை போலீசுக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் திண்டிவனம் துணை போலீஸ் சூப்பிரண்டு கணேசன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டனர்.
மேலும் கைரேகை நிபுணர் செல்வராஜ் வரவழைக்கப்பட்டு, அங்கு பதிவாகி இருந்த ரேகைகள் சேகரிக்கப்பட்டது. அதோடு, மோப்ப நாய் ராக்கியும் வரவழைக்கப்பட்டது. அது கொள்ளை நடந்த வீட்டில் இருந்து அந்த பகுதியில் உள்ள தெருவில் சிறிது தூரம் ஓடி சென்று நின்றது.
இதுகுறித்து கணேசன் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்ம மனிதர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் திண்டிவனம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.