உத்தமபாளையம் அரசு மருத்துவமனையில் மனைவியின் கழுத்தை பிளேடால் அறுத்த தொழிலாளி

உத்தமபாளையம் அரசு மருத்துவமனையில் மனைவியின் கழுத்தை தொழிலாளி பிளேடால் அறுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Update: 2021-08-02 15:58 GMT
உத்தமபாளையம்:
தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள கோகிலாபுரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் முருகன் (வயது 53). கூலித்தொழிலாளி. இவரது மனைவி ஜான்சிராணி (38). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஜான்சிராணி கோபித்து கொண்டு சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார். 
மனைவி பிரிந்து சென்றதால் விரக்தியடைந்த முருகன், நேற்று முன்தினம் அரளி விதையை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். இதில் மயங்கி கிடந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக உத்தமபாளையம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. 
இந்தநிலையில் கணவர் தற்கொலைக்கு முயன்றது குறித்து அறிந்த ஜான்சிராணி நேற்று உத்தமபாளையம் அரசு மருத்துவமனைக்கு வந்தார். அங்கு சிகிச்சை பெற்று வந்த கணவரை பார்த்து அவர் பேசிக்கொண்டிருந்தார். அப்போது முருகன் அருகில் கிடந்த பிளேடை எடுத்து மனைவியின் கழுத்தை அறுத்துள்ளார். இதில் காயமடைந்த ஜான்சிராணி அலறினார். 
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த உத்தமபாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, காயமடைந்த ஜான்சிராணியை மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுதொடர்பாக முருகன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மருத்துவமனை வளாகத்தில் மனைவியின் கழுத்தை கணவர் பிளேடால் அறுத்த சம்பவம் உத்தமபாளையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

மேலும் செய்திகள்