திருச்சியில் அதிகரித்துவரும் கொரோனா பாதிப்பு: கூட்டம் கூடும் பகுதிகள் தடை செய்யப்படும்- கலெக்டர் எஸ்.சிவராசு எச்சரிக்கை

திருச்சியில் அதிகரித்துவரும் கொரோனா பரவலால் அதிக கூட்டம் கூடும் பகுதிகளுக்கு தடை விதிக்கப்படும் என்று திருச்சி மாவட்ட கலெக்டர் எஸ்.சிவராசு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2021-08-02 02:43 GMT
திருச்சி, 
திருச்சியில் அதிகரித்துவரும் கொரோனா பரவலால் அதிக கூட்டம் கூடும் பகுதிகளுக்கு தடை விதிக்கப்படும் என்று திருச்சி மாவட்ட கலெக்டர் எஸ்.சிவராசு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

முககவசம் அணிவது குறைவு

திருச்சி மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத்துறை சார்பில் தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில் கொரோனா விழிப்புணர்வு பிரசாரத்தை திருச்சி மாவட்ட கலெக்டர் எஸ்.சிவராசு தொடங்கி வைத்தார். 

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்த மருத்துவத்துறை சார்பாக பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. திருச்சியில் தற்போது விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வினியோகிக்கப்பட்டு வருகிறது. கொரோனா முதல் அலையின் போது பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருந்தனர். முககவசம், சமூக இடைவெளியை பின்பற்றி வந்தனர். தற்போது 2-வது அலையில் தொற்று குறைந்து வருவதால் பொதுமக்களிடம் முககவசம் அணிவது குறைந்து வருவது வருத்தம் அளிக்கிறது.

கூட்டம் கூடும் பகுதிகள்

பொதுவாக ஆடி வெள்ளி, ஆடிப்பெருக்கு, ஆடிக்கிருத்திகை ஆகிய நாட்களில் கோவில்களில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதும். இதனால் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஸ்ரீரங்கம், சமயபுரம், மலைக்கோட்டை உள்ளிட்ட 5 கோவில்களில் நாளை (இன்று) மற்றும் நாளை மறுநாள்(நாளை) ஆகிய 2 நாட்களுக்கு பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி இல்லை. அர்ச்சகர்கள் மட்டும் ஆகம விதிப்படி பூஜைகள் நடத்தலாம். 

காவிரி கரையிலும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. 3-வது அலை தொடங்கி விட்டது. கேரளாவில் கொரோனா தினசரி பாதிப்பு கடந்த சில நாட்களுக்கு முன் 6 ஆயிரம் இருந்தது. தற்போது 18 ஆயிரம் வரை உள்ளது. நமது திருச்சி மாவட்டத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 55-ல் இருந்து 70 ஆக உயர்ந்து உள்ளது. இதனை குறைக்க வேண்டும் என்றால் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். முககவசம், சமூக இடைவெளியுடன் இன்னும் 6 மாத காலத்திற்கு முககவசம் அணிய வேண்டும். திருச்சியில் அதிகம் கூட்டம் கூடும் இடங்கள் காணப்பட்டால் அந்த பகுதி தடை செய்யப்படும்.

பரிசோதனை அதிகரிக்கப்படும்

திருச்சியில் மொத்தம் 30 லட்சம் பேர் உள்ளனர். இதில் 18 வயதுக்கு கீழ் 8.5 லட்சம் பேர் உள்ளனர். இதுவரை மொத்தம் 8.8 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இன்னும் 21.50 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும். அடிக்கடி சோப்பை பயன்படுத்தி கை கழுவுதல், சானிடைசர் பயன்படுத்துதல், முககவசம் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றுதல் மூலம் கொரோனா 3-வது அலையை தவிர்க்கலாம். திருச்சியில் ஒரு நாளைக்கு 3,600 முதல் 4,600 பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. அடுத்த வாரம் முதல் பரிசோதனையை அதிகப்படுத்த உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்