வாழப்பாடி அருகே பயங்கரம்: கணவரை அடித்துக்கொன்ற அரசு பள்ளி ஆசிரியை-மதுபோதையில் தகராறு செய்ததால் உருட்டுக்கட்டையால் தீர்த்துக்கட்டினார்
வாழப்பாடி அருகே மதுபோதையில் தகராறு செய்த கணவரை உருட்டுக் கட்டையால் அரசு பள்ளி ஆசிரியை தீர்த்துக்கட்டினார்.
வாழப்பாடி:
வாழப்பாடி அருகே மதுபோதையில் தகராறு செய்த கணவரை உருட்டுக் கட்டையால் அரசு பள்ளி ஆசிரியை தீர்த்துக்கட்டினார்.
இந்த பயங்கர கொலை சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
பள்ளிக்கூட ஆசிரியை
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள அத்தனூர்பட்டி கிராமத்தை சேர்ந்த சித்தன் மகன் மணிகண்டன் (வயது 35), இவருடைய மனைவி இளமதி (30). இவர்களுக்கு தக்சிந்த் (10) என்ற மகனும், அக்சிதா (6) என்ற மகளும் உள்ளனர். இளமதி, வி.மன்னார்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார்.
மணிகண்டனுக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. அவர் அடிக்கடி மது குடித்து விட்டு வந்து மனைவி, பிள்ளைகளிடம் தகராறு செய்து வந்துள்ளார்.
அடித்துக்கொலை
நேற்று மாலை 6 மணி அளவில் மணிகண்டன் வழக்கம் போல் மது போதையில் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது மனைவியிடம் தகராறு செய்ததாகவும், அதனை பொருட்படுத்தாமல் இளமதி பொறுமையாக இருந்ததாக தெரிகிறது. ஒரு கட்டத்தில் மணிகண்டன், மனைவியை அடித்து உதைத்ததாக கூறப்படுகிறது. கணவரின் சித்ரவதை தாங்காத இளமதி, வீட்டுக்கு வெளியே கிடந்த உருட்டுக்கட்டையை எடுத்து ஆத்திரத்தில் கணவரை தாக்கியதாக கூறப்படுகிறது.
இதில் தலையில் பலத்த காயம் அடைந்த மணிகண்டன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார். தகவல் அறிந்த வாழப்பாடி போலீசார் விரைந்து வந்தனர். அங்கு இறந்து கிடந்த மணிகண்டன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
காதல் திருமணம்
இந்த கொலை தொடர்பாக வாழப்பாடி போலீஸ் நிலையத்துக்கு ஆசிரியையை அழைத்து சென்றனர். அங்கு இளமதியிடம், போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகுமார் விசாரணை நடத்தினார். விசாரணையில் வெளியான தகவல்கள் விவரம் வருமாறு:-
எம்.பில் பட்டதாரியான மணிகண்டனும், எம்.ஏ., பி.எட் பட்டதாரியான இளமதியும் வெவ்வேறு சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள். இருவரும் பக்கத்து பக்கத்து ஊர் மற்றும் ஒரே கல்லூரியில் படித்ததாகவும் தெரிகிறது. அப்போது அவர்களுக்குள் காதல் ஏற்பட்டுள்ளது. இரு வீட்டார் எதிர்ப்பையும் மீறி இருவரும் திருமணம் செய்து கொண்டதாக தெரிகிறது.
மதுவுக்கு அடிமை
இந்த நிலையில் மணிகண்டனுக்கு, சென்னையில் அரசு பூம்புகார் நிறுவனத்தில் வேலை கிடைத்தது. சில நாட்களில் அலுவலகத்தில் ஏதோ பிரச்சினை தொடர்பாக மணிகண்டன் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதற்கிடையே அவருடைய மனைவி இளமதிக்கு அரசு பள்ளியில் ஆசிரியையாக வேலை கிடைத்தது. மனைவிக்கு வேலை கிடைத்த பிறகு, மணிகண்டன் சொந்த ஊருக்கு வந்தார். எந்தவொரு வேலையும் கிடைக்கவில்லை என்பதால் பிள்ளைகளை பார்த்துக் கொண்டு வீட்டிலேயே இருந்து விட்டார்.
பணி நீக்கம் செய்யப்பட்டது, வேறு வேலை கிடைக்காதது உள்ளிட்ட காரணங்களால் மணிகண்டன் மதுவுக்கு அடிமையானதாக தெரிகிறது. காலப்போக்கில் மதுகுடித்து விட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
ஆத்திரம் உயிரை பறித்தது
2 பிள்ளைகளை வைத்துக் கொண்டு தினமும் கணவர் மதுபோதையில் தகராறு செய்வதும், தாக்குவதுமாக இருந்தது இளமதிக்கு வேதனையை தந்துள்ளது. நேற்று கணவரின் செயல் அத்துமீறவே ஆத்திரம் அடைந்த இளமதி அவரை தாக்கியதாக தெரிகிறது. அவரது ஆத்திரம் கணவரது உயிரை பறித்துள்ளது விசாரணையில் தெரியவந்தது.
பள்ளிக்கூட ஆசிரியை ஒருவர், தன்னுடைய கணவரை உருட்டுக்கட்டையால் அடித்துக் கொன்ற சம்பவம் வாழப்பாடி அருகே பரபரப்பை ஏற்படுத்தியது.