அருவிக்கரைக்கு படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்

சுற்றுலா தலங்கள் மூடப்பட்டதால் அருவிக்கரைக்கு படையெடுத்த சுற்றுலா பயணிகள் அங்கு உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.

Update: 2021-08-01 21:03 GMT
திருவட்டார்:
 சுற்றுலா தலங்கள் மூடப்பட்டதால் அருவிக்கரைக்கு படையெடுத்த சுற்றுலா பயணிகள் அங்கு உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.
சுற்றுலா தலங்களுக்கு தடை
கொேரானா 2-ம் அலை சற்று ஓய்ந்துள்ள நிலையில், இன்னும் சுற்றுலா தலங்கள் முழுமையாக திறக்கப்படவில்லை. வழிபாட்டுத்தலங்களை திறந்தால் கொரோனா பரவல் அதிகரித்து விடும் என்ற எண்ணத்தில் 3 நாட்கள் கோவில்களில் பக்தர்கள் தரிசிக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. 
கன்னியாகுமரி  மேற்கு மாவட்டத்தில் உள்ள சுற்றுலாதலங்களான மாத்தூர் தொட்டிப்பாலம், திற்பரப்பு ஆகிய இடங்களில் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழும் இடங்களாகும். தற்போது இவை மூடப்பட்டுள்ளதால், இங்கு வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர். 
அருவிக்கரைக்கு படையெடுப்பு
இந்தநிலையில் குமரி மாவட்டத்தில் பரளியாறு பாயும் அருவிக்கரையைப்பற்றி கேள்விப்பட்ட சுற்றுலா பயணிகள் தற்போது அருவிக்கரை மற்றும் அருவிக்கரையின் மேல் பகுதியில் உள்ள அணைக்கட்டில் குளித்து மகிழ்ந்து செல்கின்றனர். 
திருவட்டாரில் இருந்து அரை கிலோமீட்டர் தொலைவில் உள்ள அருவிக்கரையில் பரளியாறு ஓடுகிறது. ஆற்றின் குறுக்கே தண்ணீரை தேக்கி வைக்க சிற்றணை கட்டப்பட்டுள்ளது. இதில் இருந்து விவசாயத்திற்காக அருவிக்கரை இடது மற்றும் வலது கரை கால்வாய்கள் வழியாக தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. அருவிக்கரை ஆற்றில் மழை காலங்களில் அதிகமாவும், மற்ற நாட்களில் மிதமாகவும் தண்ணீர் வரத்து இருக்கும்.
தற்போது மிதமாக தண்ணீர் பாயும் அருவிக்கரை பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகள் பெரிய சுற்றுலா தலங்களுக்குச்செல்ல முடியாவிட்டாலும், இந்த சின்ன அருவியிலாவது குளிக்க முடிகிறதே என்ற மகிழ்ச்சியில் குளித்து திரும்பிச்செல்கின்றனர். அருவிக்கரை பகுதியில் பாறைகளினூடே சலசலவென பாய்ந்தோடும் தண்ணீரும், சுற்றிலும் பச்சைப்பசேல் என காட்சிதரும் இயற்கையையும் காண்போர் மனதைக்கவரும் வகையில் உள்ளது. 

மேலும் செய்திகள்