மீன்கள் வாங்க பொதுமக்கள் குவிந்ததால் பரபரப்பு

தஞ்சையில் மீன்கள் வாங்க பொதுமக்கள் சமூக இடைவெளி இன்றி குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2021-08-01 20:43 GMT
தஞ்சாவூர்:
தஞ்சையில் மீன்கள் வாங்க பொதுமக்கள் சமூக இடைவெளி இன்றி குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கொரோனா பரவல்
தமிழகம் முழுவதும் கொரோனா குறைய தொடங்கியதையடுத்து தமிழகத்தில் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வந்தது. அதிக தொற்று பாதிக்கப்பட்ட மாவட்டங்களுள் மூன்றாவது இடத்தில் இருந்த தஞ்சை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு குறைய தொடங்கியது. இதையடுத்து பல்வேறு கடைகளும் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.
கடந்த வாரம் கொரோனா பதிப்பு குறைந்து வந்த நிலையில் தற்போது தஞ்சையில் மீண்டும் கொரோனா பதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் கொரோனா பரவுவதை தடுக்க மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
மீன்கள் வாங்க குவிந்தனர்
இந்த நிலையில் விடுமுறை நாளான நேற்று இறைச்சி வாங்க அசைவ பிரியர்கள் ஆர்வம் காட்டினர். ஆட்டு இறைச்சி மற்றும் கோழி இறைச்சி விற்பனை கடைகளிலும் வழக்கத்தைவிட மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
தஞ்சை கீழவாசல் தற்காலிக மீன்மார்க்கெட்டில் மீன் வாங்க பொதுமக்கள் ஆர்வமுடன் சமூக இடைவெளியை மறந்து குவிந்தனர். வழக்கத்தைவிட நேற்று மீன்கள் விலை குறைவாக இருந்ததால் மக்கள் அதிக அளவில் மீன்களை வாங்கிச் சென்றனர். மீன்கள் வாங்க வந்தவர்களும் கொரோனா தொற்று பரவும் என்ற அச்சத்தை மறந்து சமூக இடைவெளியின்றி குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்