இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் தரிசனத்திற்கு திடீர் தடை

இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் தரிசனத்திற்கு திடீர் தடை விதிக்கப்பட்டதால் பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

Update: 2021-08-01 20:03 GMT
சாத்தூர்,
இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் தரிசனத்திற்கு திடீர் தடை விதிக்கப்பட்டதால் பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். 
மாரியம்மன் கோவில் 
சாத்தூர் அருகே உள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் ஆடி மாதம் வழக்கத்தை விட அதிகமாக பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருவது வழக்கம். 
இந்தநிலையில் கொரோனா தொற்று 3-வது அலை பரவுவதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் சாமி தரிசனத்திற்கு தடை விதித்து மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி உத்தரவு பிறப்பித்தார். 
அதன்படி நாளை வரை பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. கோவிலில் அம்மனுக்கு அபிஷேகம் மற்றும் ஆறு கால பூஜைகள் வழக்கம்போல் நடைபெறும் என்றும் கோவில் நிர்வாக செயல் அலுவலர் கருணாகரன், கோவில் பரம்பரை அறங்காவலர் குழு உறுப்பினர் ராமமூர்த்தி பூசாரி தெரிவித்தனர். 
பக்தர்கள் ஏமாற்றம் 
இதற்கிடையே பாதயாத்திரையாக வந்தவர்கள், நேர்த்திக்கடன் செலுத்த வந்தவர்கள் என எண்ணற்ற பேர் கோவிலுக்கு வந்தனர். இந்தநிலையில் திடீரென அனுமதி மறுக்கப்பட்டதால் போலீசார் அவர்களை திருப்பி அனுப்பி வைத்தனர். இதனால் பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். 
இந்த திடீர் அறிவிப்பால் கோவிலுக்கு செல்ல சிறப்பு பஸ்கள் ரத்து செய்யப்பட்டது. கோவில் கடைகள் அனைத்தும் பூட்டப்பட்டு வெறிச்சோடி காணப்பட்டது. இந்தநிலையில் கோவிலுக்கு வந்தவர்கள் கோவிலுக்கு செல்லும் சாலை ஓரத்தில் பொங்கல் வைத்து  நேர்த்திக்கடன் செலுத்தினர். 

மேலும் செய்திகள்