1600 கோவில்கள் மூடல்

ஆடி மாத திருவிழாக்களில் கூட்டம் கூடுவதை தடுப்பதற்காக கடலூர் மாவட்டத்தில் நேற்று முதல் 1600 கோவில்கள் மூடப்பட்டன. இதனால் பக்தர்கள் வெளியில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2021-08-01 17:21 GMT
கடலூர், 

தமிழகத்தில் கொரோனா 3-ம் அலை பரவலை தொடக்கத்திலேயே கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க தொடங்கி உள்ளது. இதன் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் தொடரும் என அறிவித்துள்ளது. மேலும் அந்தந்த மாவட்டங்களில் மக்கள் கூடும் இடங்களில் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என்று தமிழக அரசு மாவட்ட கலெக்டர்களுக்கு அறிவுறுத்தியது. 
அந்த வகையில் கடலூர் மாவட்டத்தில் ஆடி மாத திருவிழாக்களில் கூட்டம் கூடுவதை தடுக்கவும், கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையிலும் கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் 1, 2, 3 மற்றும் 8-ந்தேதி ஆகிய 4 நாட்கள் பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதித்து மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் உத்தரவிட்டார். ஆனால் கோவில்களில் வழக்கம்போல் பூஜைகள் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

1600 கோவில்கள் மூடல்

அதுபோல் நேற்று முதல் மாவட்டத்தில் கடலூர் பாடலீஸ்வரர், வரதராஜ பெருமாள், திருவந்திபுரம் தேவநாதசுவாமி, திட்டக்குடி வைத்தியநாதசுவாமி, விருத்தாசலம் கொளஞ்சியப்பர், பெண்ணாடம், பிரளயகாலேஸ்வரர், சிதம்பரம் தில்லைக்காளியம்மன், காட்டுமன்னார்கோவில் வீரநாராயண பெருமாள் என மாவட்டம் முழுவதும் அறநிலையத்துறைக்கு சொந்தமான சிறிய மற்றும் பெரிய  கோவில்கள் என மொத்தம் 1600 கோவில்கள் மூடப்பட்டன. ஆனால் கோவில்களில் வழக்கமான பூஜைகள் மட்டுமே நடைபெற்றது. பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. 

கோவிலுக்கு வந்த பக்தர்கள்

ஆனால் கோவில்கள் மூடப்பட்ட தகவல் தெரியாத பக்தர்கள் நேற்று சாமி தரிசனம் செய்வதற்காக கோவில்களுக்கு சென்றனர். கடலூர் அடுத்த திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக ஏராளமான பக்தர்கள் வந்தனர். அப்போது கோவில் ஊழியர்கள், மாவட்ட நிர்வாகம் உத்தரவு காரணமாக கோவிலுக்குள் அனுமதி இல்லை என கூறினர். இதையடுத்து பக்தர்கள் வெளியில் நின்று சாமி தரிசனம் செய்து விட்டு சென்றனர். 
இதேபோல், சிதம்பரம் தில்லை காளியம்மன், கீழத்தெரு மாரியம்மன் கோவிலுக்கும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வந்தனர். ஆனால் கோவில்கள் மூடப்பட்டு இருந்ததால் பக்தர்கள் வெளியில் நின்று சாமி தரிசனம் செய்து விட்டு சென்றனர்.

வழக்கம்போல் திறந்திருந்த நடராஜர் கோவில்

ஆனால் உலக புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவில் வழக்கம் போல் திறந்திருந்தது. நான்கு கோபுர வாசல் வழியாகவும் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். அதன்படி அவர்கள் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் செய்திகள்