பொள்ளாச்சியில் கொரோனா விதிகளை பின்பற்றாத கடைகள் மீது நடவடிக்கை
பொள்ளாச்சியில் கொரோனா விதிகளை பின்பற்றாத கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சப்-கலெக்டர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பொள்ளாச்சி
பொள்ளாச்சியில் கொரோனா விதிகளை பின்பற்றாத கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சப்-கலெக்டர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஆலோசனை கூட்டம்
பொள்ளாச்சியில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றுவது குறித்து சப்-கலெக்டர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு சப்-கலெக்டர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ் தலைமை தாங்கினார்.
இந்த கூட்டத்தில் அரசுத்துறை அதிகாரிகள், போலீசார், வியாபாரிகள், நகை கடை உரிமையாளர்கள், ஓட்டல் உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில சப்-கலெக்டர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ் பேசியதாவது:-
கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் பொள்ளாச்சியில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கடைகள் மீது நடவடிக்கை
அனைத்து கடைகளிலும் சமூக இடைவெளியே பின்பற்ற வேண்டும். வாடிக்கையாளர்களை முககவசம் அணிய கடைக்காரர்கள் அறிவுறுத்த வேண்டும். வாடிக்கையாளர்களுக்கு கைகளை சுத்தம் செய்ய கிருமிநாசினி வழங்க வேண்டும். 50 சதவீதம் பணியாளர்களை கொண்டு கடைகளை இயக்க வேண்டும்.
கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக கடைபிடிக்காத கடைகள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும். எனவே கொரோனா பரவலை கட்டுப்படுத்த அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
கண்காணிப்பு
கேரளாவில் கொரோனா மற்றும் ஜிகா வைரஸ் அதிகரித்து வருவதால், தமிழக-கேரள எல்லை சோதனைச்சாவடிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்த வேண்டும். கொரோனா பரிசோதனை மற்றும் தடுப்பூசி சான்றிதழ் இருந்தால் மட்டுமே தமிழக பகுதிக்குள் அனுமதிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில் தாசில்தார்கள் அரசகுமார், விஜயகுமார், சசிரேகா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முடிவில், சப்-கலெக்டர் நேர்முக உதவியாளர் தணிகைவேல் நன்றி கூறினார்.