மேகமலை வனச்சரக அலுவலகம் முற்றுகை
மலை மாடுகளை மேய்த்ததாக கைது செய்யப்பட்ட 2 பேரை விடுவிக்கக்கோரி மேகமலை வனச்சரக அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டனர்.
கடமலைக்குண்டு:
மேகமலை வனச்சரகத்திற்கு உட்பட்ட பொம்முராஜபுரம் வனப்பகுதியில் நேற்று வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வனப்பகுதியில் அனுமதியின்றி மலை மாடுகளை மேய்த்ததாக குமணன்தொழு கிராமத்தை சேர்ந்த மலைச்சாமி (வயது 55), பழனி (52) ஆகிய 2 பேரை வனத்துறை அதிகாரிகள் கைது செய்து, விசாரணைக்காக மேகமலை வனச்சரக அலுவலகத்திற்கு அழைத்து சென்றனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த தேனி மாவட்ட மலை மாடு வளர்ப்பு சங்கம் மற்றும் தமிழ்நாடு விவசாய சங்கத்தை சேர்ந்த 20-க்கும் மேற்பட்டோர் மேகமலை வனச்சரக அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அப்போது மலைச்சாமி, பழனி ஆகியோரை விடுவிக்கக்கோரி அவர்கள் கோஷம் எழுப்பினர். இதைத்தொடர்ந்து வனச்சரகர் சதீஷ்கண்ணன் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட சங்க நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது கைது செய்யப்பட்ட 2 பேர் மீதும் எந்தவித வழக்கும் பதிவு செய்யக்கூடாது என சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.
இதையடுத்து கைது செய்யப்பட்ட மலைச்சாமி, பழனி ஆகியோரை வனச்சரகர் சதீஷ்கண்ணன் விடுவித்ததுடன், இனிமேல் அனுமதியின்றி வனப்பகுதியில் மலை மாடுகள் மேய்க்க கூடாது என எச்சரிக்கை செய்து அனுப்பினார். மேலும் சங்க நிர்வாகிகளும் தங்களது போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.