சின்னமனூர் அருகே முல்லைப்பெரியாற்றில் மூழ்கிய ஓட்டல் தொழிலாளி உடல் மீட்பு

சின்னமனூர் அருகே முல்லைப்பெரியாற்றில் மூழ்கிய ஓட்டல் தொழிலாளி உடல் மீட்கப்பட்டது.

Update: 2021-08-01 16:14 GMT
சின்னமனூர்:
தேனி மாவட்டம் கம்பம் சுங்கம் தெருவை சேர்ந்தவர் அபுதாகீர் (வயது 49). ஓட்டல் தொழிலாளி. இவரது மனைவி அமீனா பேகம் (40). இவர்களது மகள் அனிஷா (12). நேற்று முன்தினம் இவர்கள் 3 பேரும், சின்னமனூர் அருகே சீலையம்பட்டியில் உள்ள முல்லைப்பெரியாற்று தடுப்பணையில் குளிப்பதற்காக சென்றனர். அங்கு அவர்கள் ஆற்றில் குளித்து கொண்டிருந்தனர். அப்போது அனிஷா ஆற்றில் அடித்து செல்லப்பட்டார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அபுதாகீரும், அமீனா பேகமும் தங்களது மகளை மீட்பதற்காக ஆற்றில் குதித்தனர். 
இதற்கிடையே அருகில் குளித்து கொண்டிருந்த இளைஞர்கள் சிலர், ஆற்றில் 3 பேரும் தத்தளிப்பதை கண்டு காப்பாற்ற முயன்றனர். இதில் அனிஷாவை இளைஞர்கள் காப்பாற்றினர். ஆனால் அமீனா பேகத்தையும், அபுதாகீரையும் காப்பாற்ற முடியவில்லை. அவர்கள் 2 பேரும் ஆற்றில் மூழ்கினர். இதில் அமீனா பேகம் இறந்த நிலையில் உடல் மீட்கப்பட்டது. ஆனால் அபுதாகீரின் கதி என்னவென்று தெரியாமல் இருந்தது. மேலும் அவரை உத்தமபாளையம் தீயணைப்பு படையினர், சின்னமனூர் போலீசார் தேடினர். ஆனால் அவர் கிடைக்கவில்லை.  இந்தநிலையில் நேற்று 2-வது நாளாக அபுதாகீரை தேடும் பணி நடைபெற்றது. கோட்டூர், உப்புக்கோட்டை ஆகிய இடங்களில் உள்ள முல்லைப்பெரியாற்றில் இறங்கி தீயணைப்பு படையினர் தேடினர். அப்போது உப்புக்கோட்டை முல்லைப்பெரியாற்றில் மிதந்த அபுதாகீரின் உடல் மீட்கப்பட்டது. பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக சின்னமனூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

மேலும் செய்திகள்