திருவெண்காடு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் தேங்கி கிடக்கும் நெல் மூட்டைகள்
திருவெண்காடு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் தேங்கி கிடக்கும் நெல் மூட்டைகளை விரைவில் கொள்முதல் செய்ய விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவெண்காடு,
திருவெண்காட்டில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் இயங்கி வருகிறது. இந்த கொள்முதல் நிலையம் சம்பா மற்றும் குறுவை சாகுபடியில் விளைந்த நெல்லை விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்கிறது. இந்த கொள்முதல் நிலையத்தில், சின்ன பெருந்தோட்டம், மணிகிராமம், ராதாநல்லூர், இளையமதுகூடம், திருக்காட்டுப்பள்ளி, மங்கைமடம், எம்பாவை என்பன உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் நெல்லை விற்பனை செய்து வருகின்றனர்.
இந்தநிலையில் தற்போது குறுவை அறுவடை பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்த பகுதி விவசாயிகள் நேரடி நெல் கொள்முதல் நிலைய அதிகாரிகளை சில வாரங்களுக்கு முன்பு அணுகிய போது விரைவில் நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படும் என உறுதியளித்து உள்ளனர். இதனால் தங்கள் வயல்களில் விளைந்த நெல்லை மூட்டைகளில் கட்டி நேரடி நெல் கொள்முதல் நிலையத்தின் முன்பு உள்ள மைதானத்தில் அடுக்கி வைத்துள்ளனர். ஆனால் இதுவரை நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்காததால், மூட்டைகள் தேங்கி கிடக்கிறது.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூறுகையில், திருவெண்காட்டை சுற்றியுள்ள 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் குறுவை சாகுபடி செய்துள்ளோம். தற்போது விளைந்த 10 ஆயிரம் நெல் மூட்டைகளை அதிகாரிகளின் பேச்சை நம்பி நிலையத்தின் முன்பு அடுக்கி வைத்துள்ளோம்.
தற்போது திடீரென அவ்வப்போது மழை பெய்வதால் மழையில் நனையாதபடி உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். அடுக்கி வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகளை ஷிப்ட்டு முறையில் விவசாயிகள் காவல் காத்து வருகின்றனர். உடனடியாக உரிய அதிகாரிகள் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து அடுக்கி வைக்கப்பட்டுள்ள நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள் என்றார்..