வறுமை கோட்டிற்கு கீழே உள்ளவர்களுக்கு இலவசமாக 2,095 வீடுகள் கட்டித்தரப்படும் - நாகை ஒன்றியக்குழு தலைவர் தகவல்

வறுமை கோட்டிற்கு கீழே உள்ளவர்களுக்கு இலவசமாக 2,095 வீடுகள் கட்டித்தரப்படும் என நாகை ஒன்றியக்குழு தலைவர் கூறினார்.

Update: 2021-08-01 14:41 GMT
வெளிப்பாளையம், 

நாகை ஒன்றியக்குழுகூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக்குழு தலைவர் அனுசியா தலைமை தாங்கினார். கூட்டத்தில் உறுப்பினர்கள் இடையே நடந்த விவாதம் வருமாறு:-

மணிவண்ணன்(அ.தி.மு.க.):- வடக்கு பொய்கை நல்லூர் ஊராட்சி வள்ளலார் தெரு ஞானசபை சாலையினை தார்ச்சாலையாக மாற்ற வேண்டும். அம்மா சிமெண்டு விற்பனை செய்யப்படும் குடோன்களில் சிமெண்டு மூட்டைகள் ஏற்றுவதற்கு மூட்டை ஒன்றுக்கு ரூ.10 வசூல் செய்யப்படுகிறது. இதை தடுக்க வேண்டும்.

சுந்தரமூர்த்தி(அ.தி.மு.க.):- தெத்தி ஊராட்சியில் மேற்கு ஆதிதிராவிடர் காலனி சாலையை தார் சாலையாக மாற்ற வேண்டும்.

பாண்டியன்(தி.மு.க.):- ஐவநல்லூர் ஊராட்சி ஐவநல்லூர் மாரியம்மன்கோவில் தெரு சாலையை தார் சாலையாக மாற்றி தர வேண்டும்.

அனுசியா (ஒன்றியக்குழுதலைவர்) : உறுப்பினர்களின் கோரிக்கைள் அனைத்தும் நிறைவேற்றப்படும்.தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி நாகை ஊராட்சியில் வறுமை கோட்டிற்கு கீழே உள்ளவர்களுக்கு இலவசமாக வீடுகள் கட்டித்தரப்பட உள்ளது.

இதன்படி ஆதிதிராவிடர் வகுப்பை சேர்ந்தவர்களுக்கு 1,869 வீடுகளும், மற்றவர்களுக்கு 286 வீடுகள் என மொத்தம் 2,095 வீடுகள் கட்டித்தரப்பட உள்ளது. பட்டா வைத்திருப்பவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

ஒரு வீட்டின் மதிப்பு ரூ.2 லட்சத்து 40 ஆயிரம் ஆகும். கொரோனா 3-வது அலை பரவவாய்ப்புள்ளது. இதை தடுக்க அனைத்து உறுப்பினர்களும் தங்களது ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும். இவ்வாறு விவாதம் நடந்தது.

கூட்டத்தில் துணைத்தலைவர் மலர்விழி, மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர் சரபோஜி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அண்ணாதுரை, பாலகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்