ஊத்துக்கோட்டையில் கணவருடன் சேர்த்து வைக்கக்கோரி இளம்பெண் தர்ணா

ஊத்துக்கோட்டையில் கணவருடன் சேர்த்து வைக்கக்கோரி இளம்பெண் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2021-08-01 06:28 GMT
திருமணம்
திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே உள்ள தோட்டக்காரமேடு கிராமத்தை சேர்ந்தவர் ஏசு (வயது 57). கூலித்தொழிலாளி. இவரது மகள் சித்ரா (21) திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் உள்ள அரசு கல்லூரியில் பி.எஸ்.சி. பயோ டெக் படித்துள்ளார்.ஊத்துக்கோட்டையை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மகன் பிரமோத் (23). தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். கல்லூரியில் படிக்கும்போது சித்ராவுடன் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் இது காதலாக மாறியது. இருவரும் உயிருக்கு உயிராக காதலித்தனர்.திருமணம் செய்து கொள்ள இரு வீட்டார்கள் எதிர்ப்பு தெரிவிக்கவே காதல் ஜோடி கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் சென்னையில் பதிவு திருமணமும் ஜூன் மாதம் ஊத்துக்கோட்டை அருகே உள்ள செங்கரையில் உள்ள காட்டு செல்லியம்மன் கோவிலில் திருமணமும் செய்துகொண்டதாக கூறப்படுகிறது.

தர்ணா போராட்டம்
இருவரும் சென்னை மாதவரம் அருகே உள்ள மாத்தூரில் வீடு வாடகை எடுத்து தனியாக வசித்து வந்தனர். சந்தோஷமாக சென்று கொண்டிருந்த இவர்களது வாழ்க்கையில் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனையடுத்து பிரமோத் சென்னையில் உள்ள குடும்ப நல கோர்ட்டில் விவாகரத்து கேட்டு வழக்கு தொடர்ந்தார். இது சம்பந்தமாக தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் வழக்கு விசாரணைக்கு வந்தது. மீண்டும் அடுத்த மாதம் 10-ந்தேதிக்கு வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சித்ரா நேற்று காலை ஊத்துக்கோட்டையில் உள்ள 
தன்னுடைய் மாமியார் வீட்டின் எதிரே அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

கணவருடன் சேர்ந்து வாழ உள்ளதால் கணவரை அனுப்பி வைக்க கூறினார். ஆனால் பிரமோத் தாய், தந்தையுடன் வீட்டை பூட்டி விட்டு சென்று விட்டார். கணவருடன் சேர்த்து வைக்கக்கோரி இளம்பெண், மாமியார் வீட்டின் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்