சென்னை ஐகோர்ட்டு அலுவலக உதவியாளர் பணிக்கான எழுத்து தேர்வு ஹால் டிக்கெட்டில் தேர்வு மையத்தின் பெயர் தவறாக அச்சிடப்பட்டதால் தேர்வர்கள் பரிதவிப்பு

சென்னை ஐகோர்ட்டு அலுவலக உதவியாளர் பணிக்கான எழுத்து தேர்வில் ஹால் டிக்கெட்டில் தேர்வு மையத்தின் பெயர் தவறாக அச்சிடப்பட்டதால் உளுந்தூர்பேட்டையில் தேர்வர்கள் பரிதவித்தனர். ஆத்திரமடைந்த அவர்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்ததோடு போராட்டத்திலும் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது

Update: 2021-07-31 17:56 GMT
உளுந்தூர்பேட்டை

உதவியாளர் பணிக்கான தேர்வு 

சென்னை ஐகோர்ட்டில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணிக்கான எழுத்து தேர்வு நேற்று நடைபெற்றது. இதற்காக கள்ளக்குறிச்சி மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் தேர்வு மையம் அமைக்கப்பட்டிருந்தது. தேர்வு காலை 11 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் காலை 8 மணி முதல் தேர்வர்கள் தேர்வு மையங்களுக்கு வர தொடங்கினர்.

அந்த வகையில் உளுந்தூர்பேட்டையில் உள்ள குமாரமங்கலம் அரசு மாதிரி பள்ளிக்கு  விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திண்டிவனம், மரக்காணம் என தொலை தூரங்களில் இருந்து ஆண்களும், பெண்களும் திரண்டனர். ஆனால் நேரம்தான் சென்றதே தவிர அந்த பள்ளியில் எழுத்து தேர்வு நடைபெறுவதற்கான எந்த ஒரு அறிகுறிகளும் தென்படவில்லை.

ஹால் டிக்கெட்டில் தவறு 

இதனால் சந்தேகம் அடைந்த தேர்வர்கள் விசாரித்தபோது ஹால் டிக்கெட்டில் விழுப்புரம் திரு.வி.க. வீதியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி என்று குறிப்பிடுவதற்கு பதிலாக உளுந்தூர்பேட்டை குமாரமங்கலம் அரசு மாதிரி பள்ளி என தவறுதலாக குறிப்பிடப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த தேர்வர்கள் செய்வதறியாமல் பரிதவித்தனர்.

இது பற்றி அறிந்ததும் கோர்ட்டு ஊழியர்கள், உளுந்தூர்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா மற்றும் அதிகாரிகள் அங்கு வந்தனர். அவர்களுடன் தேர்வர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களை அதிகாரிகள் சமாதானம் செய்து, அரசு பஸ்சில் விழுப்புரத்திற்கு செல்ல ஏற்பாடு செய்தனர். அப்போது, அரசு பஸ் கண்டக்டர் தேர்வர்களிடம் டிக்கெட் எடுக்க வேண்டும் என கூறினார். இதனால் ஆத்திரமடைந்த தேர்வர்கள், தங்களிடம் பணம் இல்லை என்று கூறி கண்டக்டரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் பஸ்சின் முன்பு நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை சமாதானப்படுத்திய போலீசார், அந்த வழியாக வந்த தனியார் கல்லூரி பஸ்சில் விழுப்புரம் தேர்வு மையத்துக்கு அனுப்பி வைத்தனர்.

தாமதமாக தொடங்கிய தேர்வு

இதற்கிடையே உளுந்தூர்பேட்டையில் இருந்து விழுப்புரம் திரு.வி.க. வீதியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு தேர்வர்கள் செல்ல 50 நிமிடங்கள் தாமதம் ஆனது. இதையடுத்து காலை 11 மணிக்கு தொடங்கி 12 மணிக்கு முடிய வேண்டிய எழுத்து தேர்வு, 11.50 மணிக்கு தொடங்கி 12.50 மணிக்கு முடிவடைந்தது. இதனால் உளுந்தூர்பேட்டையில் பரபரப்பு ஏற்பட்டது. 

மேலும் செய்திகள்