ஊட்டியில் 1,200 போலீசார் பாதுகாப்பு பணி

ஜனாதிபதி வருகையையொட்டி ஊட்டியில் 1,200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் ராவத் தெரிவித்து உள்ளார்.

Update: 2021-07-31 17:21 GMT
ஊட்டி,

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள வெலிங்டன் ராணுவ பயிற்சி மையத்தில் ராணுவ அதிகாரிகளுடன் வருகிற 4-ந் தேதி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கலந்துரையாடி பேசுகிறார். இதற்காக அவர், கோவை சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து நாளை மறுநாள் (செவ்வாய்கிழமை) ஹெலிகாப்டர் மூலம் ஊட்டி தீட்டுக்கல் பகுதிக்கு வருகிறார். அங்கிருந்து ராஜ்பவனுக்கு காரில் செல்கிறார். பின்னர் 5-ந் தேதி ஓய்வு எடுத்துவிட்டு 6-ந் தேதி டெல்லி புறப்படுகிறார்.

ஜனாதிபதி வருகையையொட்டி ஊட்டியில் முன்னேற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. அவர் சுற்றுலா தலங்களை பார்க்க உள்ளதால், அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. மேலும் பழங்குடியின மக்கள் வசிக்கும் ஒரு கிராமம், ஒரு தேயிலை தொழிற்சாலையை பார்வையிட உள்ளதாக தெரிகிறது. இதனால் அதிகாரிகள் ஒரு சில கிராமங்களை தேர்வு செய்து உள்ளனர்.

ஊட்டி தீட்டுக்கல் பகுதியில் கால்நடை பராமரிப்பு துறைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் தளம் சீரமைக்கப்பட்டு வருகிறது. அங்கு ஹெலிகாப்டர் இறங்கும் இடத்தில் வர்ணம் தீட்டப்பட்டு உள்ளது. அதை சுற்றிலும் புதர்கள் அகற்றப்பட்டு, சாலை சீரமைக்கப்பட்டு வருகிறது. அந்த பகுதி போலீஸ் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டு, துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருக்கிறது.

இதுகுறித்து நீலகிரி போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் ராவத் கூறியதாவது:- ஜனாதிபதி வருகையையொட்டி கோவை, ஈரோடு, சேலம், தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 500 போலீசார் மற்றும் உள்ளூர் போலீசார் என மொத்தம் 1,200 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். பிற மாவட்டங்களில் இருந்து 3 போலீஸ் சூப்பிரண்டுகள் வரவழைக்கப்படுவார்கள்.

மாவட்ட எல்லைகளில் சோதனை சாவடிகள் மற்றும் முக்கிய இடங்களில் வாகன சோதனை நடத்தப்படுகிறது. தங்கும் விடுதிகளில் சந்தேகத்துக்கு இடமான நபர்கள் தங்கி உள்ளார்களா? என்று போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

அதன்படி ஊட்டியில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. ஊட்டி தாவரவியல் பூங்கா சாலையில் நடைபாதையோரத்தில் இருந்த நகர்வு கடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதில் மொத்தம் 25 கடைகள் அகற்றப்பட்டன.

மேலும் செய்திகள்