கரடியை கண்டு மிரண்டு ஓடிய காட்டெருமை
கோத்தகிரி அருகே உள்ள தோட்டத்தில் கரடியை கண்டு காட்டெருமை மிரண்டு ஓட்டம் பிடித்தது.
கோத்தகிரி,
கோத்தகிரி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. தற்போது பேரிக்காய் சீசன் காரணமாக பேரிக்காய் மரங்களை தேடி கரடிகள் படையெடுக்க தொடங்கி உள்ளன. அதன்படி கோத்தகிரி அருகே உள்ள ஜக்கனாரை, தாந்தநாடு, மிளிதேன் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தேயிலை தோட்டங்களில் விவசாயிகள் ஊடுபயிராக பயிரிட்ட பேரிக்காய் மரங்களில் கரடிகள் அட்டகாசம் செய்து வருகின்றன.
இந்தநிலையில் நேற்று மாலை ஜக்கனாரை பகுதியில் ஒரு தேயிலை தோட்டத்தில் உள்ள பேரிக்காய் மரத்தில் கரடி ஏறி காய்களை தின்று கொண்டு இருந்தது. அதே தேயிலை தோட்டத்தில் காட்டெருமை மேய்ந்து கொண்டு இருந்தது. அப்போது அந்த மரத்தின் அருகில் காட்டெருமை வந்ததும், அதை கண்ட கரடி கத்த தொடங்கியது. உடனே கரடியை நிமிர்ந்து பார்த்து மிரண்ட காட்டெருமை ஓட்டம் பிடித்தது.
இதனால் அங்கு அங்கு பச்சை தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட்டு இருந்த தொழிலாளர்கள் பீதியடைந்து பாதுகாப்பான இடத்துக்கு சென்றனர். மேலும் அவர்கள் அசம்பாவிதங்கள் ஏற்படும்முன் தேயிலை தோட்டங்களில் சுற்றித்திரியும் வனவிலங்குகளை கட்டுப்படுத்த வேண்டும் என்று வனத்துறைக்கு கோரிக்கை விடுத்து உள்ளனர்.