போடியில் அ.தி.மு.க.-தி.மு.க.வினர் ஒட்டிய போஸ்டர்களால் பரபரப்பு
போடியில் ஓ.பன்னீர்செல்வத்தை கண்டித்து தி.மு.க.வினரும், தங்கதமிழ்செல்வனை கண்டித்து அ.தி.மு.க. பிரமுகரும் போஸ்டர்கள் ஒட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தேனி:
போடியில் ஓ.பன்னீர்செல்வத்தை கண்டித்து தி.மு.க.வினரும், தங்கதமிழ்செல்வனை கண்டித்து அ.தி.மு.க. பிரமுகரும் போஸ்டர்கள் ஒட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஓ.பன்னீர்செல்வம்-தங்கதமிழ்செல்வன்
அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், தேனி வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் தங்கதமிழ்செல்வன் ஆகிய இருவரும் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை அ.தி.மு.க.வில் ஒன்றாக பயணித்தவர்கள். டி.டி.வி.தினகரன் அ.ம.மு.க.வை தொடங்கிய போது, அவருடன் தங்கதமிழ்செல்வனும் பயணிக்க தொடங்கினார். இதையடுத்து தங்கதமிழ்செல்வன் உள்பட 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். பின்னர் தங்கதமிழ்செல்வன் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து தன்னை தி.மு.க.வில் இணைத்துக்கொண்டார்.
அதைத்தொடர்ந்து கடந்த சட்டமன்ற தேர்தலில் தேனி மாவட்டம் போடியில் ஓ.பன்னீர்செல்வத்தை எதிர்த்து தி.மு.க. வேட்பாளராக தங்கதமிழ்செல்வன் போட்டியிட்டார். இதில் ஓ.பன்னீர்செல்வம் வெற்றி பெற்றார். தேர்தலில் தோல்வியை தழுவிய போதிலும், போடி தொகுதியில் பல்வேறு வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களையும், அரசு அதிகாரிகளையும் தங்கதமிழ்செல்வன் தொடர்ச்சியாக சந்தித்து வருகிறார்.
பரபரப்பு போஸ்டர்கள்
இந்தநிலையில் சில நாட்களுக்கு முன்பு போடியில் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி அளித்த போது, தங்கதமிழ்செல்வனின் இந்த செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்தார். அவர் அதிகார துஷ்பிரயோகம் செய்வதாகவும், அ.தி.மு.க.வில் இருந்த போது ஜெயலலிதாவுக்காக ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ய மறுத்ததால் விடிய, விடிய பேசி சம்மதிக்க வைத்ததாகவும் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஓ.பன்னீர்செல்வத்தை விமர்சித்து தங்கதமிழ்செல்வனும் கருத்துகளை தெரிவித்தார்.
இதற்கிடையே தங்கதமிழ்செல்வனை கண்டித்து அ.தி.மு.க. பிரமுகர் ஒருவர் பெயரில் போடி பகுதியில் நேற்று பரபரப்பான வாசகங்களுடன் போஸ்டர் ஒட்டப்பட்டு இருந்தது. அதில் ஓ.பன்னீர்செல்வத்தை அவதூறாக பேசியதற்கு தங்கதமிழ்செல்வனை கண்டித்து வாசகம் இடம் பெற்று இருந்தது. மேலும், அ.தி.மு.க., அ.ம.மு.க.வில் பயணித்து தி.மு.க.வில் இணைந்ததை விமர்சிக்கும் வகையில் அவரை மூன்று கட்சி மாவட்ட செயலாளர் என்றும் குறிப்பிட்டு இருந்தனர்.
கோஷங்கள்
இந்த போஸ்டர் ஒட்டப்பட்ட சிறிது நேரத்தில் தி.மு.க. பிரமுகர்கள் பெயரில், ஓ.பன்னீர்செல்வத்தை கண்டித்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. அதில் ஓ.பன்னீர்செல்வத்தை கண்டித்தும், தங்கதமிழ்செல்வனை பாராட்டியும் வாசகங்கள் இடம் பெற்று இருந்தன.
அ.தி.மு.க. நிர்வாகி ஒட்டிய போஸ்டரில் ஜெயலலிதா கையில் வீர வாளுடன் இருக்கும் புகைப்படமும், தி.மு.க.வினர் ஒட்டிய போஸ்டரில் மு.க.ஸ்டாலின் கையில் வீர வாளுடன் இருக்கும் புகைப்படமும் இடம் பெற்று இருந்தது. அடுத்தடுத்து ஒட்டப்பட்ட இந்த போஸ்டர்களால் போடி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதற்கிடையே போடி மீன் மார்க்கெட் பகுதிக்கு அ.தி.மு.க.வினர் சிலர் நேற்று திரண்டு வந்தனர். அங்கு நின்று கொண்டு ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாகவும், தங்கதமிழ்செல்வனுக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பினர். இந்த சம்பவம் மேலும் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.