கடலூரில் தென்மேற்கு பருவமழை விழிப்புணர்வு பேரணி

கடலூரில் தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் பாலசுப்பிரமணியம் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

Update: 2021-07-31 16:27 GMT
கடலூர், 

கடலூரில் தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த விழிப்புணர்வு பேரணி நேற்று காலை நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கி, பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இதில் கல்லூரி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு கடலூர் பாரதி சாலையில் பேரணியாக சென்றனர். அப்போது மழைக்காலங்களில் மின்மாற்றி, மின்கம்பங்கள், மின்பகிர்வு பெட்டிகள், ஸ்டே ஒயர்கள் அருகே செல்லக் கூடாது.

மின்சாதனங்கள்

மழையாலும், காற்றாலும் அறுந்து கிடக்கும் மேல்நிலை மின்கம்பி அருகே செல்லக்கூடாது. இடி, மின்னலின் போது வெட்ட வெளியில் இருக்க வேண்டாம். அப்போது மின் சாதனங்களை பயன்படுத்தக் கூடாது. மழை பெய்யும் போது மரத்தின் அடியில் ஒதுங்குவதை தவிர்க்க வேண்டும். மழைக்காலங்களில் நீர் நிலைகளின் அருகில் செல்லவேண்டாம்.
மழைவெள்ள காலங்களில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் உடனடியாக மேடான பகுதிக்கு செல்லவேண்டும். வெள்ளக்காலங்களில் ஆறு மற்றும் வாய்க்காலில் குளிப்பதையோ, புகைப்படங்கள் (செல்பி) எடுப்பதை தவிர்க்க வேண்டும்.

துண்டு பிரசுரங்கள்

அறுந்து விழுந்து கிடக்கும் மின்கம்பிகளை பார்த்தால் உடனடியாக 1077 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்க வேண்டும் என்பது போன்ற வாசகங்கள் அடங்கிய விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு, கலெக்டர் வினியோகம் செய்தார்.

மேலும் செய்திகள்