லோயர்கேம்ப் அருகே முல்லைப்பெரியாற்றில் மூழ்கி மாணவர் பலி

லோயர்கேம்ப் அருகே முல்லைப்பெரியாற்றில் மூழ்கி மாணவர் பரிதாபமாக இறந்தார்.

Update: 2021-07-31 16:26 GMT
கூடலூர்:
லோயர்கேம்ப் அருகே முல்லைப்பெரியாற்றில் மூழ்கி மாணவர் பரிதாபமாக இறந்தார். 
ஆற்றில் மூழ்கிய மாணவர்
தேனி மாவட்டம் கூடலூர் அருகே லோயர்கேம்ப்பில் உள்ள மின்வாரிய குடியிருப்பில் வசித்து வருபவர் ராஜமகேந்திரன். இவர், மின்வாரிய அலுவலகத்தில் களப்பணியாளராக பணியாற்றி வருகிறார். அவருடைய மகன் காமேஷ்பிரபு (வயது 17). பிளஸ்-2 முடித்துள்ள இவர், கல்லூரியில் சேருவதற்கான ஏற்பாடுகளை செய்து வந்தார். 
இந்தநிலையில் காமேஷ்பிரபுவின் வீட்டுக்கு, அவருடைய நண்பரான காமயகவுண்டன்பட்டியை சேர்ந்த நவீன் (17) என்பவர் நேற்று வந்தார். பின்னர் அவர்கள் 2 பேரும், மின்வாரிய குடியிருப்புக்கு அருகே உள்ள முல்லைப்பெரியாறு பகுதிக்கு சென்றனர். அப்போது காமேஷ்பிரபு மட்டும் முல்லைப்பெரியாற்றில் இறங்கி குளித்தார். நவீன் ஆற்றின் கரையில் அமர்ந்து வேடிக்கை பார்த்து கொண்டிருந்தார். 
இந்தநிலையில் ஆற்றில் குளித்து கொண்டிருந்த காமேஷ்பிரபு ஆழமான பகுதிக்கு சென்றதாக கூறப்படுகிறது. இதனால் அவர் ஆற்று நீரில் அடித்து செல்லப்பட்டதுடன் தண்ணீரில் மூழ்கினார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த நவீன், காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள்... என்று அபயகுரல் எழுப்பினார். அதை கேட்டு அங்கு வந்த சிலர் ஆற்றில் குதித்து காமேஷ்பிரபுவை மீட்க முயன்றனர். ஆனால் அவர்களால் முடியவில்லை. 
உடல் மீட்பு
பின்னர் இதுகுறித்து லோயர்கேம்ப் போலீசாருக்கும், காமேஷ்பிரபுவின் பெற்றோருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்துக்கு அவர்கள் விரைந்து வந்து காமேஷ்பிரபுவை தேடும் பணியில் ஈடுபட்டனர். 
தற்போது முல்லைப்பெரியாற்றில் அதிக அளவு தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதால் காமேஷ்பிரபுவை தேடும் பணியில் சிரமம் ஏற்பட்டது. இதனால் பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் போலீசார் பேசி, அணையில் இருந்து தண்ணீர் திறப்பை நிறுத்தினர். 
பின்னர் போலீசாரும், அக்கம்பக்கத்தினரும் காமேஷ்பிரபுவை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது முல்லைப்பெரியாற்றில், 18-ம் கால்வாய் தடுப்பணை அருகில் இறந்த நிலையில் காமேஷ்பிரபுவின் உடல் மீட்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. 
இதுகுறித்து லோயர்கேம்ப் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுதாகர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். முல்லைப்பெரியாற்றில் மூழ்கி மாணவர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்