போலீசில் கொடுத்த புகார் மீது நடவடிக்கை எடுக்காததால் பெட்ரோலை உடலில் ஊற்றி தற்கொலைக்கு முயன்றவர் கைது

போலீசில் கொடுத்த புகார் மீது நடவடிக்கை எடுக்காததால் ஒரத்தநாடு துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பெட்ரோலை உடலில் ஊற்றி தற்கொலைக்கு முயன்றவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-07-31 16:09 GMT
ஒரத்தநாடு,

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டை அடுத்துள்ள பொய்யுண்டார்கோட்டை செல்லம்பட்டியை சேர்ந்தவர் திராவிடச்செல்வன் (வயது 40). இவர், அதே பகுதியில் துரித உணவு(பாஸட்புட்) கடை வைத்து நடத்தி வந்தார்.

இவர் தனது வீட்டில் வைத்திருந்த 9 பவுன் நகை உள்ளிட்ட பொருட்களை சிலர் திருடி சென்று விட்டதாக ஒரத்தநாடு போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

சம்பவத்தன்று ஒரத்தநாடு துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு சென்ற திராவிடச்செல்வன் தனது புகார் குறித்து போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி பாட்டிலில் கொண்டு வந்திருந்த பெட்ரோலை தனது உடலில் ஊற்றி தற்கொலை செய்து கொள்ளப்போவதாக கூச்சலிட்டார்.

இதனை தொடர்ந்து அங்கு பணியில் இருந்த போலீசார் அவரை பிடித்து ஒரத்தநாடு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இதுகுறித்து சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கலையரசன் (59) கொடுத்த புகாரின் பேரில் ஒரத்தநாடு போலீசார் தற்கொலைக்கு முயன்றதாக திராவிடச்செல்வன் மீது வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

போலீசில் கொடுத்த புகார் மீது நடவடிக்்கை எடுக்காததால் பெட்ரோலை உடலில் ஊற்றி தற்கொலைக்கு முயன்றவரை போலீசார் கைது செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்