முருகன் கோவில்களுக்கு காவடி எடுத்து வர பக்தர்களுக்கு அனுமதி இல்லை

வேலூர் மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில்களுக்கு பக்தர்கள் காவடி எடுத்து வர அனுமதி இல்லை என்று கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தெரிவித்துள்ளார்.

Update: 2021-07-31 15:52 GMT
வேலூர்

வேலூர் மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில்களுக்கு பக்தர்கள் காவடி எடுத்து வர அனுமதி இல்லை என்று கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கொரோனா 3-வது அலை

வேலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவல் தற்போது குறைந்துள்ளது. ஆனாலும் ஆடி மாதம் தொடங்கியுள்ளதால் அம்மன் மற்றும் முருகன் கோவில்களுக்கு செல்லும் பக்தர்கள் அரசு வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக கடைபிடிக்க தவறினால் 3-வது அலை ஏற்பட வாய்ப்பு உள்ளது. கோவில்களில் திருவிழாக்கள் மற்றும் குடமுழுக்குகள் மேற்கொள்ள அரசால் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வழிபாட்டு தலங்களில் சாமி தரிசனம் செய்ய வேண்டும். அனைத்து கோவில் பணியாளர்கள் முக கவசம் கட்டாயம் அணிந்திருக்க வேண்டும். முக கவசம் அணியாதவர்களை கோவிலுக்குள் அனுமதிக்க கூடாது. 

பொதுமக்கள் தேங்காய், பழம் செலுத்தி அர்ச்சனை செய்யவும், கோவில் வளாகத்தில் பூ, தேங்காய் பழம் போன்றவற்றை விற்பனை செய்யவும் தடை விதிக்கப்படுகிறது.

காவடி எடுத்து வர அனுமதி இல்லை

வேலூர் மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில்களுக்கு பக்தர்கள் காவடி எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்த அனுமதி இல்லை.

 அதேபோன்று கோவிலுக்குள் பொங்கல் வைக்கவோ, கூழ் வார்ப்பதற்கோ, அலகு குத்தி பிராத்தனை செய்யவோ, அங்கபிரதட்சணம் மற்றும் இதர பிரார்த்தனைகளுக்கு தடை விதிக்கப்படுகிறது.

பக்தர்கள் பங்கேற்புடன் சாமி ஊர்வலம் செல்ல அனுமதி இல்லை. பக்தர்கள் அன்னதானம் வழங்குவதற்கு அனுமதி இல்லை. கோவில் வெளிப்பகுதிகளில் மட்டும் உணவு பொட்டலங்களை பொதுமக்களுக்கு சமூக இடைவெளியை பின்பற்றி வழங்கலாம். கோவிலுக்குள் பிரசாதத்தை உட்கார்ந்து சாப்பிட அனுமதி இல்லை. 

இசை கச்சேரி, ஆடல் நிகழ்ச்சி, பஜனை மற்றும் நாடகம் போன்றவற்றை நடத்துவதற்கு தடை விதிக்கப்படுகிறது. தெப்ப திருவிழா நடத்தவும் அனுமதி இல்லை. அரசின் வழிபாட்டு நெறிமுறையை பின்பற்றாதவர்கள் மீது பேரிடர் மேலாண்மை சட்டப்படி அபராதம் விதித்து வழக்குப்பதிவு செய்யப்படும். 

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்