வீட்டு வாசலில் நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிள்-ஸ்கூட்டருக்கு தீவைப்பு - மர்ம நபருக்கு வலைவீச்சு
மயிலாடுதுைறயில் வீட்டு வாசலில் நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டருக்கு தீவைத்த மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
மயிலாடுதுறை,
மயிலாடுதுறை தெற்கு குமரக்கட்டளை தெருவை சேர்ந்தவர் அருள்குமரன் (வயது 40). இவருக்கு சொந்தமான மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டரை அவருடைய வீட்டின் வாசலில் நிறுத்தி வைப்பது வழக்கம்.
அதேபோல நேற்று முன்தினம் இரவுவும் தனது மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டரை வீட்டின் வாசலில் நிறுத்தி வைத்திருந்தார். நள்ளிரவில் அந்த வழியாக வந்த மர்ம நபர் ஒருவர், வீட்டின் வாசல் முன்பு நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிள் மற்றும் கூட்டருக்கு தீவைத்து விட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டார்.
திடீரென நள்ளிரவில் சத்தம் கேட்டு வெளியே வந்த அருள்குமரன் மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் தீப்பற்றி எரிவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் சென்று தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தார்.
இதுகுறித்து அருள்குமரன் கொடுத்த புகாரின்பேரில், மயிலாடுதுறை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, கண்காணிப்பு கேமரா காட்சிகளை கொண்டு மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டருக்கு தீவைத்த மர்ம நபரை வலைவீசி தேடி வருகிறார்கள்.