85 இளம் ராணுவ வீரர்கள் சத்திய பிரமாணம்

குன்னூர் அருகே வெலிங்டன் பயிற்சி மையத்தில் 85 இளம் ராணுவ வீரர்களின் சத்திய பிரமாண நிகழ்ச்சி நடந்தது.

Update: 2021-07-30 23:05 GMT
ஊட்டி

குன்னூர் அருகே வெலிங்டன் பயிற்சி மையத்தில் 85 இளம் ராணுவ வீரர்களின் சத்திய பிரமாண நிகழ்ச்சி நடந்தது.

பயிற்சி மையம்

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே வெலிங்டனில் உள்ள மெட்ராஸ் ரெஜிமெண்டல் சென்டர்(எம்.ஆர்.சி.), இந்திய ராணுவத்தில் பழமை வாய்ந்தது. இந்த பயிற்சி மையத்தில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களை சேர்ந்த இளைஞர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். 

அவர்களுக்கு போர் ஆயுதம் கையாளும் பயிற்சி, உடற்பயிற்சி, இந்தி மொழி பயிற்சி உள்பட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. 10 மாதங்கள் பயிற்சி பெற்ற இளம் ராணுவ வீரர்கள் சத்தியபிரமாணம் எடுத்த பிறகு எல்லைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

சத்திய பிரமாணம்

இந்த நிலையில் நேற்று வெலிங்டன் பயிற்சி மையத்தில் உள்ள நாகேஷ் பேரக்சில் பயிற்சி முடித்த 85 இளம் ராணுவ வீரர்களின் சத்தியபிரமாண நிகழ்ச்சி நடைபெற்றது. 

நிகழ்ச்சிக்கு பயிற்சி மையத்தின் துணை கமாண்டென்ட் கர்னல் குமாரதாஸ் தலைமை தாங்கி பயிற்சி முடித்த இளம் ராணுவ வீரர்கள் 85 பேருக்கு சத்திய பிரமாணம் செய்து வைத்தார். அவர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

பதக்கம்

பின்னர் பயிற்சி அளித்த பயிற்சியாளர்களுக்கு துணை கமாண்டென்ட் வாழ்த்துக்களை தெரிவித்தார். பயிற்சியில் சிறந்து விளங்கிய இளம் ராணுவ வீரர்களுக்கு பதக்கங்களை வழங்கி கவுரவித்தார். 

கொரோனா பரவல் காரணமாக சத்திய பிரமாண நிகழ்ச்சி சமூக இடைவெளியுடன் நடந்தது. 
நிகழ்ச்சியில் கொரோனா பரவல் காரணமாக இளம் ராணுவ வீரர்களின் பெற்றோர்கள் அனுமதிக்கப்படவில்லை.

மேலும் செய்திகள்