வாழப்பாடி அருகே காதல் திருமணம் செய்த பெண் தற்கொலை

வாழப்பாடி அருகே காதல் திருமணம் செய்த பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். உறவினர்கள் போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2021-07-30 21:09 GMT
வாழப்பாடி
காதல் திருமணம்
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே பொன்னாரம்பட்டியைச் சேர்ந்தவர் மணிவண்ணன் (வயது 26). இவர், நெல் அறுவை எந்திரத்தை வாடகைக்கு விட்டு தொழில் செய்து வருகிறார். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு நாமக்கல் மாவட்டம் கோரையாறு பகுதியைச் சேர்ந்த சிந்தாமணி (25) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 4 வயதில் யோகன் என்ற மகன் உள்ளான்.
திருமணம் ஆகி ஒரு ஆண்டிலேயே கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு நாமக்கல் மாவட்டத்துக்கு தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.
வேறு திருமணம்
சிந்தாமணி பிரிந்து சென்ற சில ஆண்டுகளில் மணிவண்ணன் வேறு திருமணம் செய்து கொண்டார். இதற்கிடையே சிந்தாமணியின் தந்தை இறந்த கொஞ்ச நாட்களில் தாயும் இறந்து விட்டார். இதனால் சிந்தாமணியின் உறவினர்கள் இனி, நீ கணவர் வீட்டுக்கு சென்று அவருடன் வாழ்க்கை நடத்து என்று கூறியிருக்கிறார்கள்.
இதையடுத்து சிந்தாமணி தன்னுடைய மகனை அழைத்துக் கொண்டு கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு கணவர் வீட்டுக்கு வந்தார். அப்படி இருந்தும் மணிவண்ணன், சிந்தாமணிக்கு அந்த பகுதியில் ஒரு வீடு பார்த்து குடிஅமர்த்தினார்.
தற்கொலை
இதற்கிடையே நேற்று மாலை சிந்தாமணி அவர் தங்கி இருந்த வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. தகவல் அறிந்த வாழப்பாடி போலீசார் சிந்தாமணி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் சிந்தாமணியின் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் நேற்று இரவு பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த தாசில்தார் மாணிக்கம் சம்பவ இடத்துக்கு வந்து உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி்னார். அதன்பிறகே அவர்கள் சமாதானம் அடைந்து கலைந்து சென்றனர்.
இதற்கிடையே சிந்தாமணியின் சாவு குறித்து போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகுதான் சிந்தாமணி எப்படி இறந்தார் என்ற விவரம் தெரிய வரும் என்று போலீசார் கூறினர்.

மேலும் செய்திகள்