மோட்டார் சைக்கிள் மீது டிராக்டர் மோதல்; முதியவர் பலி
மோட்டார் சைக்கிள் மீது டிராக்டர் மோதியதில் முதியவர் பரிதாபமாக இறந்தார்.
வரதராஜன்பேட்டை:
அரியலூர் மாவட்டம் வரதராஜன்பேட்டை அருகே தென்னூர் கிராமத்தில் உள்ள தெற்குத்தெருவை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 40). இவருக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளில், இவரும், மன்னாங்கொரை கிராமத்தை சேர்ந்த அருள்தாஸ்(65), செல்வராஜின் உறவினர் லூர்து சின்னப்பராஜ் ஆகியோர் கடலூர் மாவட்டம் ராமாபுரம் நோக்கி சென்றனர். தென்னூர்- ராமாபுரம் சாலையில் சென்றபோது, எதிரே வந்த டிராக்டர், செல்வராஜ் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் 3 பேரும் நிலை தடுமாறி கீழே விழுந்ததில், தலையில் பலத்த அடிபட்டு அருள்ராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். லூர்து சின்னப்பராஜ், செல்வராஜ் ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர். அவர்களை, ஆண்டிமடம் போலீசார் மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதில் செல்வராஜ் மேல்சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அருள்தாசின் உடல் பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிந்து, டிராக்டரை ஓட்டி வந்த டிரைவர் தென்னூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த மணிவண்ணனை(42) போலீசார் கைது செய்தனர்.