பாதிக்கப்பட்ட பயிருக்கு அரசு அறிவித்த நிவாரணத்தை வழங்க வேண்டும்
பாதிக்கப்பட்ட பயிருக்கு அரசு அறிவித்த நிவாரணத்தை வழங்க வேண்டும் என்று விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
பெரம்பலூர்:
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
தமிழக சட்டமன்ற தேர்தல் மற்றும் கொரோனா ஊரடங்கிற்கு பிறகு 4 மாதங்கள் கழித்து பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா தலைமை தாங்கி விவசாயிகளிடம் கோரிக்கை தொடர்பான மனுக்களை பெற்றார்.
கூட்டத்தில், தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில செயலாளர் ராஜாசிதம்பரம் பேசுகையில், கடந்த டிசம்பர், ஜனவரி மாதங்களில் பெய்த தொடர் மழையால் பாதிக்கப்பட்ட பயிருக்கு அரசு அறிவித்த நிவாரணமும், பாதிக்கப்பட்ட பயிருக்கு காப்பீடு தொகையும் வழங்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். உரத்தின் விற்பனை விலையை மத்திய அரசே நிர்ணயிக்க வேண்டும். தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் கடன் தள்ளுபடி செய்யப்பட்டதற்கான சான்று வழங்கி, கடனை தள்ளுபடி செய்ய வேண்டும். சர்க்கரை ஆலையில் கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.4 ஆயிரம் வழங்க வேண்டும், என்றார்.
ஏரிகளை தூர்வார வேண்டும்
தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் விசுவநாதன் பேசுகையில், பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஏரிகளையும் தூர்வார வேண்டும். சின்னமுட்லு அணை கட்டும் திட்டத்தை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.
அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ரமேஷ் பேசுகையில், தமிழகத்தில் வேளாண் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையில் விவசாயிகளின் குழந்தைகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். பெரம்பலூர் மாவட்டத்தில் வேளாண் கல்லூரி, வேளாண் பண்ணை தொடங்க வேண்டும். விளை பொருட்களில் எடை மோசடியை தடுக்க வேண்டும், என்றார்.
மாவு பூச்சி நோய் தாக்குதல்
தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் நீலகண்டன் பேசுகையில், மரவள்ளி, கரும்பு உள்ளிட்ட பயிர்களில் தாக்கி வரும் மாவு பூச்சி நோய் தாக்குதலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார். விவசாயி துங்கபுரம் ராமலிங்கம் பேசுகையில், பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து பாலை முழுவதும் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். துங்கபுரம் பகுதியில் தடுப்பணைகள் கட்ட வேண்டும், என்றார். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஜெயராமன் பேசுகையில், நூத்தப்பூர் ஏரியின் பாசன வாய்க்காலை தூர்வார வேண்டும், என்றார்.
கூட்டத்தில் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் (பொறுப்பு) ஏழுமலை, பெரம்பலூர் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் செல்வகுமரன், வேளாண்மை துணை இயக்குனர் பாபு, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) பூவலிங்கம் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.