பெங்களூருவில் இருந்து வெளிநாட்டுக்கு கடத்த முயன்ற ரூ.6 கோடி செம்மரக்கட்டைகள் மீட்பு
பெங்களூருவில் இருந்து வெளிநாடுகளுக்கு கடத்த முயன்ற ரூ.6 கோடி மதிப்பிலான செம்மரக்கட்டைகள் மீட்கப்பட்டுள்ளது. தலைமறைவான மா்மநபர்களை போலீசார் தேடிவருகிறார்கள்.
பெங்களூரு:
செம்மரக்கட்டைகள் கடத்த முயற்சி
பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு போதைப்பொருட்கள் கடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், பெங்களூருவில் இருந்து வெளிநாட்டுக்கு செம்மரக்கட்டைகள் கடத்த முயற்சி நடப்பதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, பெங்களூருவில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்ல இருந்த சரக்குகளை சுங்கத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் சோதனை நடத்தினார்கள். அப்போது சரக்கு முனையத்தில் சந்தேகப்படும் படியாக பெரிய, பெரிய பெட்டிகள் இருப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
ரூ.6 கோடி மதிப்பு
அந்த பெட்டிகளில் சோதனை நடத்தியபோது, அதற்குள் செம்மரக்கட்டைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த செம்மரக்கட்டைகளை அதிகாரிகள் மீட்டனர். சர்வதேச சந்தையில் அந்த செம்மரக்கட்டைகளின் மதிப்பு ரூ.6 கோடி இருக்கும் என்று சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். செம்மரக்கட்டைகளை கடத்த முயன்ற பெட்டிகளில் இருந்த முகவரிகள் தவறாக இருப்பது தெரியவந்தது.
இதனால் அந்த செம்மரக்கட்டைகளை கடத்த முயன்றவர்கள் யார்?, அதற்கு பின்னணியில் இருப்பவர்கள் யார்? என்பது தெரியவில்லை. இதுகுறித்து விமான நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த கடத்தலில் தொடர்புடைய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.